காய்கறி விற்பனையாளரின் வண்டியை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொரோனா வைரசின் 2-ம் அலை பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் மற்றும் கடைகள் இயங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை எந்தவித இடர்பாடுகளும் இன்றி செயல்படுத்த காவல்துறை அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், பஞ்சாபில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த காய்கறி வண்டியை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரியின் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியின் செயல் அனைவரையும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில் ஊரடங்கை செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட பக்வாரா பகுதி எஸ்.எச்.ஓ நவ்தீப் சிங், தெரு விற்பனையாளர் ஒருவரின் காய்கறி வண்டியை எட்டி உதைப்பதை காணலாம். விற்பனையாளருக்கு எதிராக அதிகாரியின் நடத்தைக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இணையத்தில் வைரலான இந்த வீடியோ பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் போலீஸ் டைரக்டர் ஜெனரல் டிங்கர் குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.எச்.ஓ நவ்தீப் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். நவ்தீப் சிங் மீது துறை ரீதியான விசாரணையையும் பஞ்சாப் காவல்துறை பின்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கபுர்தலா காவல்துறை எஸ்.எஸ்.பி கன்வர்தீப் கவுர், எஸ்.எச்.ஓவின் இந்த நடத்தை சேவை விதிக்கு முற்றிலும் எதிரானது மற்றும் தேவையற்றது என்று கூறினார். இந்த சம்பவம் முழு காவல்துறை அதிகாரிகளுக்கும் கெட்ட பெயரைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். இதுதவிர, தெரு விற்பனையாளரின் இழப்பை ஈடுசெய்ய கபுர்தலா காவல்துறை முடிவு செய்துள்ளதுடன், விற்பனையாளருக்கு உதவ அவர்களின் சம்பளத்திலிருந்து பணத்தை பங்களித்து வருவதாகவும் கூறியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற மே15ம் தேதி வரை பஞ்சாப் அரசு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த காலங்களில், அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தெரு விற்பனையாளர்களின் ஆர்டி பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் காய்கறி சந்தையில் சமூக விலகலை பராமரிப்பது பற்றியும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. பஞ்சாபில் கடந்த புதன்கிழமை மொத்தம் 8015க்கு புதிய கொரோனா பாதிப்பும், 182 இறப்புகளும் பதிவாகியுள்ளன. கொரோனா நோய்த்தொற்றால் 63000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது மாநிலத்தில் பதிவாகியுள்ளன.

டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்தியாவில் 4.14 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 3,915 புதிய இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.

Contact Us