பிரட்டனிலிருந்து இந்தியா புறப்பட்டது உலகின் மிகப்பெரிய விமானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பரிதவித்து வரும் இந்தியாவிற்கு உதவுவதற்காக ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், 1000 வெண்டிலேட்டர்கள் அடங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது இங்கிலாந்து அரசு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை கொடிய வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. தினந்தோறும் 4 லட்சத்திற்கும் மேல் புதிதாக பாதிப்புக்குள்ளாகி வருவதுடன் தினசரி பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகளவிலான பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ஆக்ஸிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் உதவ முன்வந்துள்ளன. பல நாடுகளும் மருத்துவ பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்து வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவுக்கு அவசியமான மருத்துவ தளவாடங்களை உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளது இங்கிலாந்து அரசு.

வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் இருந்து நேற்று இந்த விமானம் புறப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானமான Antonov 124-ல் உயிர் காக்கும் மருத்துவ தளவாடங்களை இரவெல்லாம் பணியாளர்கள் ஏற்றியதாகவும் இந்த விமானம் அயர்லாந்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியில் தரையிறங்கும் எனவும் செஞ்சிலுவை சங்கத்தினர் இந்த தளவாடங்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் உதவுவார்கள் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் 18 டன் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் மூன்றும், 1000 வெண்டிலேட்டர்களும் அனுப்பிவைக்கப்படுகின்றன.

இதில் வரும் 18 டன் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒவ்வொன்றும் 40 அடி கண்டெய்னர் அளவில் இருக்கும், இதன் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதனை பயன்படுத்தி 50 பேர் ஒரே நேரத்தில் ஆக்ஸிஜன் சப்ளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us