எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா? சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்? கொஞ்ச நேரத்தில் தெரியும்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் நடைபெற்றது.

முடிவின்றி முடிந்த கூட்டம்

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது.

கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது.

மீண்டும் இன்று கூட்டம்

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் 10-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு கட்டுப்பாட்டின்படி அரசு கூட்டங்கள் தவிர்த்து பிற கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. எனினும் புதிய சட்டமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருப்பதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா நேற்று மனு அளித்தார்.

போலீஸ் அனுமதி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து தொண்டர்கள் கூட்டம் இன்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படும் என்று கூறி, கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

போலீசார் தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் யார்?

எனவே திட்டமிட்டபடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நடக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us