எடப்பாடி பழனிசாமிக்கு 61 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு.. ஒபிஸ் மண்ணை கவ்வினார்!

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள அ.தி.மு.க. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அமர உள்ளது.

இந்தநிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டை யில் உள்ள தலைமை கழகத்தில் கடந்த 7-ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

ஓ பன்னீர்செல்வம்

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தேர்தல் தோல்வி குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள்.

இதனால் அன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அன்றைய தினம் முடிவு செய்யவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்குத்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

கொங்குமண்டலம், மத்திய மண்டலம், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பா.ஜனதா மேலிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் வெளியில் தெரிவித்து வந்தனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வருவதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரை ஏக மனதாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.

61 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால் அவரை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுப்பதுதான் முறையாக இருக்கும் என்று யோசனை தெரிவித்தனர். கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல நீங்களும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறிய யோசனைகளை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று காலை கூடியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Contact Us