பணத்திற்காக கொலை செய்வது போல் மிரட்டல் நாடகமாடிய கும்பல்; நிஜமாகவே கொலையில் முடிந்தது…

திண்டுக்கல் மாநகராட்சி 6வது வார்டு பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய ராம்குமார். தொழிலதிபரான இவர் பழனி பைபாஸ் சாலையில் சித்ரா என்ற பெயரில் ரைஸ் மில் ஒன்றை நடத்திவந்தார். தொழில் நலிவு காரணமாக ரைமில்லை மூடிவிட்டு அந்த இடத்தில் பார்க்கிங் மற்றும் சில கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் தண்ணீர் சுத்திகரிக்கும் பிளான்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.

தொழிலதிபர் ராம்குமாரிடம் அதிக பணம் இருப்பதாக எண்ணிய சிவராஜ் அவரை கடத்தி மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் சிலரை கூட்டாளிகளாக சேர்க்க முடிவு செய்தார். தனது நிறுவனத்தில் தண்ணீர் பிடிக்க வரும் கவடக்கார தெருவைச் சேர்ந்த மணிகண்டன், மேற்கு அசோக்நகரை சேர்ந்த ஜானகிராமன், ஆர்வி நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், குணசீலன், கோகுல், ஓஎம்ஆர் பட்டியைச் சேர்ந்த சந்தோஸ் ஆகிய ஆறு பேரையும் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டார்.

ராம்குமாரை கடத்த திட்டமிட்ட கூட்டாளிகள் 7 பேரும், வெள்ளிக்கிழமை இரவு அவர் வழக்கமாக செல்லும் கோவிந்தாபுரம் மயான சாலை அருகே காத்திருந்தனர். ராம்குமாரை அச்சமடையச் செய்வதற்காக கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் எடுத்துச் சென்றிருந்தனர். ராம்குமார் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் பார்க்கிங் மற்றம் கடைகளை மூடிவிட்டு வீட்டிற்கு கிளம்பி வந்துள்ளார்.

வீட்டிற்கு செல்லும் வழியில் சிவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராம்குமாரை தடுத்து நிறுத்தி கடத்த முயன்றுள்ளனர். ஆனால் ராம்குமார் எதிர்ப்பு காட்டி அவர்களுடன் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அவருக்கு மரண பயம் காட்ட தாங்கள் வைத்திருந்த கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் லேசாக கீறி உள்ளனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக ராம்குமார் பலத்த காயமடைந்தார். இதனால் அச்சமடைந்த 7 பேரும் தப்பி  ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் ராம்குமார் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராம்குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த ராம்குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், கொலைக் குற்றவாளிகளான சிவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட ஏழு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மில் அதிபரிடம் பணம் பறிப்பதற்காக திட்டமிட்டு மிரட்டல் நாடகமாடிய கும்பலின் செயல் நிஜமாகவே கொலையில் முடிந்த சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us