நாயின் பெயரை சொல்லாததால் ஆத்திரம்: அண்டை வீட்டார் மீது கொலைவெறித் தாக்குதல்!

டாமி என பெயரை கூறி அழைக்காமல் நாய் என அழைத்ததால் ஆத்திரம் அடைந்த நாயின் உரிமையாளர் அண்டை வீட்டாரின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாய் வளர்ப்பவர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் சில நேரங்களில் நாயினாலேயே மனக் கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நேரங்களில் எல்லை மீறும் சம்பவங்களும் அரங்கேறத்தான் செய்கின்றன.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நாய் வளர்ப்பவருக்கும், அருகாமையில் வசிக்கும் அண்டை வீட்டாருக்கும் நாயினால் ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்திருக்கிறது. இதில் பெண் உட்பட 4 குடும்ப உறுப்பினர்கள் மோசமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குருகிராமின் சைபர் சிட்டி பகுதியில் உள்ள ஜோதி பார்க் 6வது தெருவில் குப்தா மற்றும் நரங் என இரண்டு பேரின் குடும்பங்கள் அருகாமையில் வசித்து வருகின்றனர். கடந்த புதனன்று நரங் குடும்பத்தைச் சேர்ந்த சுதிர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே கிளம்பிய போது குப்தா வீட்டில் வளர்க்கப்படும் டாமி என்ற நாய் சுதிரை துரத்தியிருக்கிறது.

அப்போது உங்கள் நாயை சுதந்திரமாக விடாமல் செயினால் கட்டிப்போடுங்கள், எங்கள் வீட்டு குழந்தைகளை துரத்துகிறது என குப்தா குடும்பத்தினாரிடம் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் டாமி என கூப்பிடாமல் எப்படி நாய் என அழைக்கலாம் என சுதிரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து குப்தா குடும்பத்தினர் சுதிருக்கு ஆதரவாக வர அங்கு வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஆத்திரத்தில் குப்தா குடும்ப உறுப்பினர்களை இரும்பு கம்பியாலும், கட்டையாலும் நரங் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் குப்தா குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து ஜோதி பார்க் காவல்நிலையத்தில் தங்களை தாக்கியதாக குப்தா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். எதிர்தரப்பிலும் இருந்து புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாயின் பெயரால் அழைக்காமல் நாய் என அழைத்ததற்காக ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தை வீடியோவாக எடுத்த ஒருவர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Contact Us