கொரோனா பரபரப்பிற்கு மத்தியில் 16 மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா.. அதிர வைத்த காரணம்!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசு மருத்துவர்கள் 16 பேர் கூட்டாக ராஜினாமா செய்து கடிதங்களை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே அதிகப்படியான பணிச்சுமையில் இருந்து வருவது மருத்துவர்களும், செவிலியர்களும் தான். நோயாளிகளை நேரடியாக கையாளும் இவர்களுக்கே கொரோனா வைரஸ் தாக்கக்கூடிய அதிகபட்ச ரிஸ்க் இருக்கிறது. இருந்தாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அர்ப்பணிப்புடன் இக்கடின சூழலில் அவர்கள் பணியாற்றி வருவது பாராட்டுக்குரிய செயலாகும்.

ஒரு சில இடங்களில் பணிச்சுமை காரணமாக மருத்துவர்கள் அதிருப்திக்குள்ளாவதும், இறப்புகளின் காரணமாக மருத்துவர்கள் ஆக்கப்படுவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் முதன்மை மற்றும் சமூக சுகாதார மையங்களில் பணியாற்றி வரும் மூத்த மருத்துவர்கள் 16 பேர் திடீரென மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிக்கு கூட்டாக தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பெருந்தொற்று காலத்தில் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிந்து வரும் நிலையில் தண்டனை உத்தரவுகள், அநாகரீகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்படுவதாக ராஜினாமா கடிதங்களை அனுப்பியுள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உன்னாவ் மாவட்டத்தில் சமூக சுகாதார மையங்களின் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வரும் 11 மருத்துவர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்த 5 மருத்துவர்களும் தங்களின் ராஜினாமா கடிதங்களை உன்னாவ் மாவட்ட துணை மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான தன்மேயிற்கு நேற்று மாலை அனுப்பியுள்ளனர்.

கோவிட் -19 தொற்றுநோய் பரவலின் போது மருத்துவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, முழு தொழில் பக்தியுடன் கடமையை நிறைவேற்றினாலும், நிர்வாக அதிகாரிகள் ஒரு சர்வாதிகார அணுகுமுறையை கடைப்பிடித்து தண்டனை உத்தரவுகளை பிறப்பித்தனர் என்று மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்களின் சக மருத்துவர்களுக்கு எந்தவித விளக்கமும் கேட்காமல், கலந்துரையாடாமல் தன்னிச்சையாக தண்டனை உத்தரவுகளை நிர்வாகத்தினர் பிறப்பிக்கின்றனர் என்றும் தாங்கள் நடத்தப்படும் விதம் எங்களை அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணி அல்லது எந்தவிதமான பணி எங்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் அதற்கான உடனடி இலக்குகளை நிர்வாகத்தினர் நிர்ணயிக்கின்றனர். அதிகபட்ச அக்கறையுடன் தான் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம், இருப்பினும் எங்கள் துறை மேலதிகாரிகள் தண்டனை உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். அநாகரீகமான நடத்தை மற்றும் ஒத்துழைக்காத அணுகுமுறை எங்களை தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுக்கிறது எனவும் அவர்கள் கூறினர்.

இதனிடையே ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா கடிதங்கள் அனுப்பியுள்ளது மாவட்ட சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. இது குறித்து உன்னாவ் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அஷுதோஷிடம் கேட்ட போது, தன்னிடம் யாரும் ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை என்பதால் ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எதுவும் எடுக்க முடியாது. இது குறித்து மாவட்ட மேஜிஸ்திரேட் விசாரணை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என கூறினார்.

Contact Us