ஷங்கருக்கு லைகா வைத்த அடுத்த ‘செக்’… முற்றுகிறது இந்தியன் 2 விவகாரம்

இந்தியன் 2 படம் தொடர்பாக லைகா நிறுவனம் மற்றும் டைரக்டர் ஷங்கர் இடையேயான விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கோர்ட்டிற்கு சென்றும் இந்த விவகாரம் முடிவுக்கு வராமல், மெகா சீரியல் போல் தொடர்கிறது. இந்தியன் 2 தொடர்ந்து தாமதமானதால் தெலுங்கில் ராம் சர ணின் 15 வது படம் மற்றும் அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்க போவதாக ஷங்கர் அறிவித்தார். இதனால் கோர்ட்டிற்கு சென்ற லைகா, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டது.

முதலில் இருதரப்பும் சமரச பேச்சில் ஈடுபடவே கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரத்தில் கமல், சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்க போவதாக கூறப்பட்டது. அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில், இந்தியன் 2 தாமதத்திற்கு லைகா நிறுவனம் தான் முக்கிய காரணம் என ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கமலுக்கு மேக் அப்பில் ஏற்பட்ட அலர்ஜி, கிரைன் விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது, கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால் தான் இந்தியன் 2 தாமதமானதே தவிர, தன்னால் தாமதம் ஏற்படவில்லை என ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.

இதனால் ஷங்கரின் வாதத்தை ஏற்ற கோர்ட், அவருக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை கேட்டு, லைகா மேல்முறையீடு செய்துள்ளது. ஷங்கர் மற்ற படங்களை இயக்குவதை தடுப்பதற்காக சட்ட ரீதியாக மட்டுமின்றி, அதைத் தாண்டி பல விதங்களிலும் லைகா நிறுவனம் ஷங்கருக்கு ‘செக்’ வைத்து வருகிறது. அதில் ஒன்றாக, லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட சங்கங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்க அனுமதிக்கக் கூடாது என அந்த கடிதத்தில் லைகா நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

Contact Us