பிரதமர் மோடியை காணவில்லை : கொரோனா தொற்றில் தோல்வி கண்ட மோடி அரசுக்கு…

கொரோனா தொற்றை மத்திய அரசு கையாளுவதில் தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் காணவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. ஆனால், மோடி தீவிரமாகப் பணியாற்றிவருகிறார் என பா.ஜ.க-வினர் ட்வீட் செய்து வருகின்றனர்… உண்மை நிலை என்ன?

கொரோனா தடுப்பு நடவடிக்கையிலிருந்து மத்திய அரசு நழுவிக்கொண்டு மாநில அரசுகளின் மீது சுமையை ஏற்றிவிட்டது எனப் பல வகையில் மக்களும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்துவருகின்றனர். எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்களும் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆளும் பா.ஜ.க அரசு சரியாகக் கையாளவில்லை என விமர்சித்துக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றன.

பிரதமர், உள்துறை அமைச்சரைக் காணவில்லை என எதிர்க்கட்சிகளும், சர்வதேச ஊடகங்களும் விமர்சிக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசோ `கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். கொரோனா தடுப்புக்கு மாநில அரசுகள் கேட்கும் அனைத்து உதவிகளையும் உடனடியாக மத்திய அரசு செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டு, மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றன’ என விமர்சனங்களுக்கு பதிலளித்துவருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன, என்ன செய்திருக்க வேண்டும் என்பது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினோம். “இரண்டாவது அலை வரப்போகிறது என ஜனவரி மாதத்திலேயே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இந்திய மருத்துவ வல்லுநர்கள் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்கள். ஆனால், பிரதமர் மோடி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, கொரோனா தடுப்பில் மட்டுமல்ல அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்ததிலும் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது என சர்வதேச நாடுகளுக்கெல்லாம் சென்று பெருமை பேசத் தொடங்கியிருந்தார்.

பிரதமர் மோடி பேசிக்கொண்டே இருந்த அதே காலத்தில் பிரிட்டன் போன்ற நாடுகள் இரண்டாவது அலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து அதிலிருந்து எளிதில் மீண்டுவந்துவிட்டன. அதற்குப் பிறகு தேர்தல், கும்பமேளா அறிவித்து நடத்தினார் பிரதமர் மோடி. இந்தியாவில் இருக்கும் அனைத்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோவாக்ஸின், கோவிஷீல்டு ஃபார்முலாக்களைக் கொடுத்து மருத்துத் தயாரிப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்வாதம் வைத்தது. இதுவரை இந்தியாவில் ஏற்பட்ட பெருந்தொற்றுகளுக்கெல்லாம் மத்திய அரசுதான் தடுப்பூசி கொடுத்துவந்தது. ஆனால், இப்போதுதான் முதன்முதலாக ஒன்றிய அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து, மாநில அரசுகளின் தலையில் கட்டியிருக்கிறது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால், இதுவரை அந்தப் பணத்தில் ஒதுக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. கொரோனா தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி-யை நீக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆக, இதுவரை மத்திய அரசு இரண்டாவது அலை தொடர்பாக அலட்சியமாக நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, நெருக்கடிநிலையை எட்டிய பின்னர் பொறுப்பை மாநில அரசுகளின் தலையில் கட்டிவிட்டது. ஆனால், விலை நிர்ணயத்தை மட்டும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு வந்துவிட்டன” என்றார்.

மேலும் “நடுத்தர மக்கள் மத்தியில் பா.ஜ.க அரசு கொரோனா தடுப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பெயர் அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது. அதனால், பா.ஜ.க உறுப்பினர்கள் கொரோனா தடுப்பில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மக்கள் மத்தியில் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான பெயரைத் தவிர்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். அதற்கான பிரசாரத்தைத்தான் தற்போது பா.ஜ.க-வினர் செய்துவருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க அமைச்சரே அந்த மாநில அரசின் தோல்வி குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கங்கையில் பிணங்கள் மிதந்துவருகின்றன. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான் உச்ச நீதிமன்றமே தலையிட்டு மருத்துவ நிபுணர்களை நியமித்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை நேரடியாகக் கையில் எடுத்துச் செயல்படும் நிலையில்தான் பா.ஜ.க அரசின் நிர்வாகம் இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் செயலில் ஏதும் அரசியல் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சென்னை, டெல்லி, மும்பை உயர் நீதிமன்றங்களும் மத்திய அரசு செயலைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டன என்றால் அது `மிஸ்ஸிங்’ அரசுதான் இல்லையா… மத்திய அரசு செயல்படாதது மட்டுமல்ல, கொரோனா தடுப்பில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று வெற்றுப் பெருமை பேசியதன் விளைவைத்தான் நாம் தற்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

பிரதமர் மோடி மீதான விமர்சனம் குறித்து பா.ஜ.க நிர்வாகி வழக்கறிஞர் அஸ்வத்தாமனிடம் பேசினோம். “முதல் அலையின்போது முன்கூட்டியே முழு ஊரடங்கை அமல்படுத்திக் கட்டுப்படுத்தியதாகட்டும், தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரித்து அதிக எண்ணிக்கையில் மக்களுக்குக் கொடுத்ததாகட்டும், தற்போது ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கருத்தில்கொண்டு மாநிலங்கள் கேட்கும் அளவைத் தருவதாகட்டும்… எல்லாவற்றிலும் மத்திய அரசு செயல்பாடுகளை உலக சுகாதார அமைப்பு, பிற உலக நாடுகள் ஆகியவை இந்திய அரசைப் பாராட்டிவருகின்றன.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி 38 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப் பின்னாடி இருப்பது சீனா, இது மனிதனால் தயாரிக்கப்பட்ட வைரஸ் என்பது எல்லாருக்கும் தெரிந்தது. இப்படி சீனா செய்த தவற்றை மறைப்பதற்காகவே மத்திய அரசு மீது பத்திரிகைகள் குற்றம்சாட்டுகின்றன.

மனிதன் எந்த அளவுக்கு வளர்ந்து, நாகரிகம் அடைந்து, அறிவார்ந்த சமூகமாக இருக்கிறோம் என்பது தெரிகிறது. ஆனால், ஒரு நாடு ஒரு கிருமியை உருவாக்கி, உலகம் முழுவதும் பயோ வாரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருமே வாய் திறக்கவே தயாராகவே இல்லை. சீனாவுக்கு ஆதரவாகப் பேசுவதுதான் அறிவு என நினைக்கும் ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி வருகிறது. சுகாதாரத்தில் மத்திய அரசின் பங்கு என்பது மாநிலங்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருவதுதான்.

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின் தொற்றுக்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பதெல்லாம் மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும். அப்படியிருக்கும்போது டெல்லி, கேரளா, தமிழ்நாடு இவையெல்லாம் கொரோனா தடுப்பில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. இங்கிருக்கும் அரசியல் தலைவர்களெல்லாம் உத்தரப்பிரதேசத்தை கேலி செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு உலக சுகாதார நிறுவனம் இந்திய அளவில் அதிக அளவில் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளும் மாநிலம் என்றும், கொரோனா தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய மாநிலம் என்றும் உத்தரப்பிரதேசத்தைப் பாராட்டியுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இல்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மக்களுக்குச் சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை. ஊரடங்கை முறையாகச் செயல்படுத்தவில்லை எனப் பல அர்த்தமற்ற செயல்களைச் செய்துவிட்டு கல்லறைக்கு வர்ணம் பூசும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான ஊரடங்கால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. மாநில அரசுகள் செய்யும் தவற்றை மறைக்க ஒரு சிலரைக் கையில் வைத்துக்கொண்டு அனைத்தையும் மத்திய அரசு செய்ததாகக் குற்றம் சுமத்திவருகிறார்கள்.

தவறு எங்கே ஏற்பட்டுள்ளது, அதை எப்படித் திருத்த வேண்டும் என்று யோசிப்பதை விட்டுவிட்டு தாங்கள் செய்த குற்றத்தை யார் மீது திருப்பலாம் என யோசித்து மத்திய அரசு பக்கம் திருப்பிவிடுகிறார்கள். மக்கள் ஏன் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தோம் என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது நிலைமையை உணர்ந்து, தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

Contact Us