இந்தியாவில் கப்பல் மூழ்கியதில் 26 பேர் உயிரிழப்பு – 61 பேரை தேடும் பணி தீவிரம்!

அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயல் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயல் மும்பை அருகே நடுக்கடலில் எண்ணெய் துரப்பண பணிகளில் ஈடுபட்டிருந்த கப்பலையும் இழுத்துச் சென்றது.

மும்பையின் தென்மேற்கு பகுதியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் ஹீரா எண்ணெய் கிணறு உள்ளது. இங்கு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்து வருகின்றது. இதற்காக அங்கு பி-305 என்ற எண்ணெய் துரப்பண கப்பல் நிலை நிறுத்தப்பட்டது, அதில் 261 ஊழியர்கள் இருந்தனர்.

இந்நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக பி-305 எண்ணெய் துரப்பண கப்பல் கடலில் அடித்து செல்லப்பட்டது. பின்னர் கப்பலில் கடல் நீர் புக தொடங்கியது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் கடற்படையினர் கப்பலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

அதன்படி, மீட்பு பணிக்காக ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல் மற்றும் கடற்படைக்கு சொந்தமான மேலும் சில கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கப்பலும் எண்ணெய் துரப்பண கப்பலை நோக்கி விரைந்தன. எனினும் சூறைக்காற்று, பலத்த மழை, கொந்தளித்த அலையால் அந்த கப்பலை நெருங்குவதில் மீட்பு படையினருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது.

கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் அந்த கப்பல் இருக்கும் பகுதியை அடைந்தனர். அங்கே, எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கி கொண்டுடிருந்தது. இதனால் ஊழியர்கள் பலர் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக உயிர் காக்கும் கவச உடையுடன் கடலில் குதித்து தத்தளித்ததுக் கொண்டிருந்தனர்.

அவர்களை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 186 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் கடற்படை கப்பல், ஹெலிகாப்டர்கள் மூலம் மும்பை கடற்படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

எனினும், 26 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 61 பேர் மாயமாகினர். கப்பல் மூழ்கும் முன்பே அதில் இருந்த அனைவரும் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்துள்ளனர். எனவே மாயமானவர்கள் கடலில் மிதந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை கடற்படையினர் தேடி வருகின்றனர்.

Contact Us