அம்மா.. அண்ணன் கடவுள தேடிப்போயிருக்காங்க – பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தி கண்ணீர்விடும் காசா தந்தை; இஸ்ரேலின் தாக்குதல்!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா நகரம் கடுமையான சேதத்தை கண்டுள்ளது. தீவிரவாத முகாம்களை நோக்கி தான் தாக்குதல் நடத்துகிறோம் என்கிறது இஸ்ரேல். குழந்தைகளும், பெண்களும் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர் என மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. ‘குழந்தைகளை நோக்கி ஏன் ஏவுகணைகளை அனுப்பி எங்களை கொலை செய்கிறீர்கள் என கடந்த சில தினங்களுக்கு முன்பு காசாவை சேர்ந்த 10 வயது சிறுமி கண்ணீர் வடித்தார். இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலில் தனது குடும்பத்தை மொத்தமாக இழந்து 5 மாத குழந்தையை மட்டும் கையில் ஏந்தி நிற்கிறார் காசாவை சேர்ந்த முகமது அல் ஹதீதீ.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை பறிக்கொடுத்துள்ளார். 6 மாத குழந்தையை கையில் ஏந்தியபடி கண்ணீர் வடிக்கிறார். 6 மாத குழந்தையான ஓமர் அவரது அம்மாவின் அரவணைப்பில் இருந்துள்ளான். அவனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. முகங்களில் சிறு காயங்கள் உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓமர் அருகில் அமர்ந்து ஹதிதி “ அவர்கள் கடவுளை தேடிப் போய்விட்டனர். நாமும் இங்கு நீண்ட நாள்களுக்கு இங்கு இருக்கப்போவதில்லை. நீயும், நானும் விரைவில் அவர்களை சந்திப்போம்.” என ஓமரிடம் கூறுகிறார்.

‘ ரம்ஜான் என்பதால் குழந்தைகள் புத்தாடை அணிந்திருந்தார்கள். ரம்ஜானை கொண்டாட தங்களது மாமா வீட்டுக்கு விளையாட்டு பொருட்களை எடுத்துச் சென்றனர். மாலையில் என்னை அழைத்தனர். இன்று ஒரு இரவு மட்டும் இங்கு தங்கிவிட்டு வருகிறோம் என்றனர். நானும் அவர்களின் விருப்பத்துக்கு விட்டுவிட்டேன். எனக் கூறும்போதே ஹதீதீ உடைந்து அழுகிறார்.

மீண்டும் தன்னை தேற்றிக்கொண்டு பேசியவர், ‘ நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். திடீரென குண்டு விழும் சத்தம் கேட்டு கண்விழித்தேன். அக்கம்பக்கத்தினர் எனக்கு போன் செய்து இஸ்ரேல் ஏவிய ஏவுகணை எனது மைத்துனரின் வீட்டை தாக்கியதாக கூறினர். நான் என்னால் முடிந்த வேகத்தில் அந்த இடத்தை அடைந்தேன். வீடு இடிந்து இருந்தது. மீட்பு படையினர் வீட்டில் இருந்து சடலங்களை வெளியில் எடுத்து வந்தனர், எல்லோரும் இறந்துவிட்டனர். எனக் கண் கலங்கினார்.

ஓமரின் முகத்தை வருடியவாறு, “ என்னுடைய எல்லா குழந்தைகளும் தாய்ப்பால் குடித்து வளர்ந்தனர். ஓமர் பிறந்த முதல்நாள் முதலே தாய்ப்பால் குடிக்க மறுத்துவிட்டார். கடவுள் எங்களை தயார்படுத்திக்கொண்டிருந்தார். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை”என உடைந்து அழத் தொடங்கினார். வீட்டை காலி செய்வதற்கு எந்த எச்சரிக்கையும் தராமல் குண்டு வீசுவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என இஸ்ரேலை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். நான் ஓமரை கவனித்துக்கொள்வேன்” என கண்ணீர் வடிக்கிறார் அந்த அப்பாவித் தந்தை.

Contact Us