இந்திய பிரதமர் முதலையின் புகைப்படத்துடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாக பரபரப்பு? எப்படியெல்லாம் ஜோசிக்கிறாங்க!

கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் வாரணாசியில் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா தொற்றின் 2-வது அலையில் நாம் பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது.

அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த கொரோனா தொற்றின் 2- வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என கண்கலங்கிய படி பிரதமர் மோடி கூறினார். மேலும், கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் கூறினார்.

மருத்துவர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போது பிரதமர் மோடி கண்ணீர் விட்ட நிகழ்வு தொடர்பாக சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

அதில், அமெரிக்காவில் வெளியாகும் பிரபல ஆங்கில செய்தி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’ கடந்த 21-ம் தேதி வெளியிட்ட பதிப்பில் முன்பக்கத்தில் ‘இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார்’ என்று எழுதப்பட்டு அதற்கு கீழே முதலை ஒன்று இருப்பது போல புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்திய பிரதமர் மோடி முதலைக்கண்ணீர் விடுகிறார் என்று விமர்சிப்பது போன்று அந்த புகைப்படம் இருந்தது. ’நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியானதாக சமூகவலைதளத்தில் பரவி வந்த அந்த புகைப்படத்தை காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங் மற்றும் பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உள்பட பல்வேறு நபர்கள் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக முதலைக்கண்ணீர் விடுவது போன்று வெளியான புகைப்படம் போலி என்று தெரியவந்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கடந்த 21-ம் தேதி அது போன்ற புகைப்படம் வெளியாகவில்லை. மாறாக சோலான் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான புகைப்படத்துடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படத்திற்க்கு பதிலாக எடிட் செய்து முகப்பு பக்கத்தி பிரதமர் மோடி அழுகிறார் என்று முதலையின் புகைப்படம் பொலியாக வைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் போலியாக எடிட் செய்யப்பட்டு பிரதமர் மோடி கண்ணீர் விடுகிறார் என்று முதலையின் புகைப்படத்தை வெளியிட்டதாக பரவி வரும் புகைப்படம் சமூகவலைதளத்தில் ஆயிரக்கணக்கான நபர்களால் பகிரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us