செல்போனில் கேம் விளையாடிய மாணவர் தூக்குப்போட்டு இறந்த பரிதாபம்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்து ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடப்பதால் ஹேமச்சந்திரன் மற்றும் இவரது அண்ணன் லோகேஷ் இருவரும் செல்போனில் பாடம் படித்து வந்தனர். சிவக்குமாருக்கு ஊரில் ஒரு வீடும்.

நிலத்தில் ஒரு வீடும் உள்ளது. அண்ணன்- தம்பி இருவரும் நிலத்தில் உள்ள வீட்டில் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். மீதி நேரத்தில் இருவரும் ஒரே செல்போனில் ‘பயர் பிரீ’ கேம் விளையாடி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று மாலை 4 மணிக்கு இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என அதில் அறிவுறுத்தப் பட்டதாக தெரிகிறது. இதை அப்படியே இருவரும் செய்து காட்டுவதற்காக வீட்டில் இருந்த கயிரை எடுத்து ஹேமச்சந்திரன் வெளியிலுள்ள அறையிலும், லோகேஷ் உள்ளே இருந்த அறையிலும் தூக்கு மாட்டிக் கொள்வதற்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது ஹேமச்சந்திரன் உடனடியாக தூக்கில் தொங்கி இருக்கிறார். அப்போது கழுத்து வலி தாங்கமுடியாமல் சத்தம் போட்டான். உடனே பக்கத்து அறையில் இருந்த லோகேஷ் ஓடிவந்து தம்பியை காப்பாற்ற முயற்சி செய்தான். மேலும் இதுகுறித்து தாய் ஜமுனாவுக்கு லோகேஷ் போனில் தகவல் தெரிவித்தான்.

அண்ணன் உயிர்தப்பினான்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து தூக்கில் தொங்கிய ஹேமச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை டாக்டர் பரிசோதனை செய்ததில் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. ஹேமச்சந்திரன் கூச்சலிட்டு அவனை காப்பற்ற முயன்றதால் லோகேஷ் உயிர்தப்பினான்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us