வங்க கடலில் உருவானது யாஸ் புயல்: எச்சரிக்கை மக்களே!

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் இரு தினங்களுக்கு முன்பாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல், ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தில், நாளை மறுநாள் கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கரையை கடக்கும் போது மணிக்கு 155 கிலோ மீட்டரில் இருந்து 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு வங்கத்தின் டிக்ஹா கடற்கரையில் இருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், இன்று இரவு தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவர்களை வெளியேற்றும் பணிகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டு வருகிறது. புயல் தொடர்பாக ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திராவின் முதலமைச்சர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

யாஸ் புயல் தொடர்பாக பேரிடர் மீட்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதேபோல், தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 46 குழுக்கள் படகுகள் உள்ளிட்ட கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். புயல் காரணமாக ராஞ்சி – ஹவுரா இடையேயான இரண்டு ரயில் சேவையை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

Contact Us