சீன அமைச்சர் இலங்கைப் செல்வதாக இருந்தது.. திடீர் என இரத்து செய்யப்பட்டுள்ளது!! பின்னணி என்ன?

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர் திட்டத்தை மையப்படுத்தியதாகவே இந்த விஜயம் அமையவிருந்ததாகவும் அவரது விஜயத்திற்கு முன்னதாக இலங்கை தரப்பில் துறைமுக நகர் நிர்வாக கட்டமைப்பிற்கு தேவையான சட்ட அனுமதிகள் பூர்த்திப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதாகவே கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சர்வதேச இராஜதந்திரிகளினதும் கணிப்பாகியிருந்தது.

ஆனால் தற்போது உயர் நீதிமன்றின் தீர்ப்புடன் திருத்தங்களுக்குட்பட்ட நிலையில் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு சட்டம் குறித்து சீன தூதரகம் எவ்விதமான கருத்துக்களையும் கூறவில்லை.

எனவே இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்குட்பட்டு துறைமுக நிர்வாக கட்டமைப்பு அமைய வேண்டும் என்பதில் சீனா எவ்வாறானதொரு நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது வெளிப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலையில் சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவரது விஜயத்தில் இரு முக்கிய விடயங்கள் எதிர்பார்க்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதலாவது துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் மற்றும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இடம்பெறவுள்ள சீன கமியூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வை சிறப்பு அதிதியாக அழைப்பதாகும்.

ஏற்கனவே இரு முறை திட்டமிடப்பட்டிருந்த சீன விஜயம் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இரத்துச்செய்யப்பட்டது. இவ்வாறானதொரு நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் இலங்கை விஜயம் இரத்தாகியுள்ளது.

இதேவேளை, சீன உயர்மட்டத்தினரின் கொழும்பை நோக்கிய விஜயங்களானது அனைத்துலக பார்வைக்குட்பட்டிருந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வீஃபெங் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Contact Us