ஊகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா… அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையால் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

சீனாவின் ஊகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தயாரித்திருக்கும் தகவல் உலக நாடுகளிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி, அடுத்த சில மாதங்களில் உலகின் பெரும்பாலான நாடுகளை பதம்பார்க்கத் தொடங்கியபோதே, சீனாதான் கொரோனா வைரஸை உருவாக்கியது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

அத்துடன், இது சீனா வைரஸ் என்றும் அப்போதைய அதிபர் டிரம்ப் பெயரிட்டார். ஆனால், அதை சீனா தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, ஊகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தயாரித்துள்ளது.

அதில், ஊகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் பல ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வகத்தில் பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கை, தொற்று பரவிய நேரம் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும் அடக்கி அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தயாரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியது குறித்து உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கொரோனா சீனாவில் இருந்து பரவியது குறித்த விசாரணையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Contact Us