கொரோனாவை எதிர்த்து போராடி மீண்ட 105 வயது மூதாட்டியை பார்த்து கத்துக்கோங்க!

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் கர்நாடகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 105 வயது மூதாட்டி மீண்டு வந்திருப்பதுடன், மற்றவர்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வகையில் முன்மாதிரியாக மாறி இருக்கும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் சங்கர். இவருடைய தாய் காலம்மா (வயது 105). இவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். பின்னர் காலம்மாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, மகன் வேலை செய்யும் தனியார் மருத்துவமனையிலேயே காலம்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. தற்போது அவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதால், டாக்டர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தார்கள்.

இதற்கிடையில், கொரோனாவில் இருந்த மீண்ட காலம்மா தன்னுடைய மகனிடம் தான் நல்லபடியாக இருப்பதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படியும் கூறினார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நேற்று காலம்மா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 105 வயதிலும் கொரோனாவில் இருந்து மீண்டு முன்மாதிரியாக காலம்மா மாறியுள்ளார்.

Contact Us