சகோதரரின் திருமணத்தில் பெண் தாசில்தார் செய்த வேலை;; இதெல்லாம் ஒரு அரச அதிகாரி!

ஒடிசா மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், திருமண ஊர்வலங்ளை நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டிய ஒரு அதிகாரியே அவற்றை மீறியிருப்பது திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சுக்கின்டாவில் தாசில்தாராக பணிபுரியும் அந்த பெண்மணி, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது சகோதரரின் திருமண ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் நடனமாடி களித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியது. அதையடுத்து ஜாஜ்பூர் மாவட்ட கலெக்டர், தற்போது விடுப்பில் உள்ள அந்த பெண் அதிகாரி மீண்டும் பணிக்கு திரும்பியதும் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர், சீருடையில் பெண் போலீசாருடன் நடனமாடிய காட்சி சமூக ஊடங்களில் வெளியானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Contact Us