வெளிநாடு தப்பி ஓடிய மெகுல் சோக்‌ஷி ஆண்டிகுவாவில் இருந்து மாயமானதாக தகவல்!

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிச்சத்துக்கு வந்தது.

முறைகேடு புகார் கிளம்பவும் இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டது.

நிரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில், மெகுல் ஷோக்சி கரீபியன் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்தார். ஆண்டிகுவாவில் கடந்த 2018- ஆம் ஆண்டு குடியுரிமையும் பெற்றுக்கொண்டார்.

தேடப்படும் நபர்களை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆண்டிகுவா இல்லை. எனினும், அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டுள்ளன. மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் இண்டர்போல் விடுத்துள்ளது.

இந்த நிலையில், ஆண்டிகுவாவில் இருந்து மெகுல் சோக்‌ஷி திடீரென மாயம் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெகுல் ஷோக்சியின் வழக்கறிஞரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மெகுல் சோகிஷி மாயம் ஆனதால் அதிர்ச்சி அடைந்துள்ள அவரது குடும்பத்தினர் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.

ஆண்டிகுவா போலீசாரும் மெகுல் சோக்‌ஷி இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, மெகுல் சோக்‌ஷி கியூபா நாட்டிற்கு தப்பியிருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டிகுவாவை போன்ற கியூபாவிடமும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொள்ளவில்லை.

Contact Us