மேனகா மற்றும் சந்துரு தொடர்பில் அதிரடி பதிவொன்றை வெளியிட்டுள்ள தென்னிந்திய முக்கிய பிரபலம்!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுபவரும் மிகச் சிறந்த எழுத்தாளருமான மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு மேனகா மற்றும் சந்துரு நன்றி தெரிவித்துள்ளனர்.

அதற்கு காரணம் இதுதான்., ஜெயமோகன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துக்கட்டுரை பின்வருமாறு.,

யாரோ பரிந்துரைக்க யாரோ அனுப்ப கிடைத்த இந்த இணைப்பு இந்த வீடடங்குக் காலகட்டத்தில் உற்சாகமான மனநிலையை உருவாக்கியது. முக்கியமாக இந்த காட்சித்துணுக்குகளில் நடிப்பு மிகச்சரளமாக இருக்கிறது. இங்கே தமிழகத்து டிவி நிகழ்ச்சிகளிலுள்ள செயற்கையான பாவனைகளும் நொடிப்புகளும் டெம்ப்ளேட் ஷாட்களும் இல்லை. இரண்டுபேருமே அத்தனை இயல்பு.

இன்னொன்று இலங்கைத்தமிழ். நான் மிகவிரும்பும் வட்டாரத்தமிழ். சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டது. அதன்பின் ஈழப்போராட்ட காலகட்டத்தில் அங்கிருந்து வரும் நண்பர்களிடம் பழகி அறிந்தது. எங்களூர் மொழிக்கு ஒலியளவில் நெருக்கமானது. திருவனந்தபுரத்துக்கு அந்தப்பக்கம் போனால் ஈழத்தமிழர்களை குமரித்தமிழர்கள் என்றுதான் நினைப்பார்கள். அன்று அது பலவகையிலும் வசதி.

அதிலும் ’காலம்’ செல்வத்தின் தீவுத்தமிழ். அவன் இவன் உவன் என்னும் சொல்லாட்சி. ‘அம்பது ரூபா உளைச்சிட்டான்’ என்பதுபோன்ற சொலவடைகள். அவர்கள் என்ன பேசினாலும் மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டே இருப்பேன். அதிலும் செல்வத்தின் மனைவி தேவாவின் உச்சரிப்பு கிட்டத்தட்ட ஒருவகை பாடல்.

ஆண்பெண் உறவின் ரகசியங்களும் விளையாட்டுக்களும். இதற்கு முடிவே இல்லை. அஜந்தா சிற்பங்களில் பார்வதியும் சிவனும் சதுரங்கம் விளையாடும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. பார்வதி தெனாவெட்டான சிரிப்புடன் பகடையை உருட்ட திரண்ட புஜங்களுடன் விழி பிதுங்கி ‘என்னடா இது, ஒரெழவும் புரியலை’ என்று சிவன் அமர்ந்திருக்கிறார். மனம் உடைந்துவிட்டார் என்பது தெளிவு. கீழே பகடைக்களமாக பிரபஞ்சம்.

அறிந்த இலங்கை நண்பர்கள் எல்லாரும் நினைவுக்கு வருகிறார்கள். ஆச்சரியமென்னவென்றால் இது அ.முத்துலிங்கம் முதல் ’காலம்’ செல்வம் வரை அத்தனைபேருக்கும் பொருந்துகிறதோ என்று தோன்றுவதுதான். சரிதான் நமக்கும் பொருந்துகிறது.

Contact Us