யார் யாருக்கு தொடர்பு’?.. விடிய விடிய நடந்த விசாரணையில்… கைதான ஆசிரியர் பகீர் வாக்குமூலம்!.. PSBB பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

psbb school teacher sexual harassment police report

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்களை அனுப்புகிறார். அரைகுறை ஆடையுடன் ஆன்லைனில் பாடம் நடத்துகிறார். இப்படி மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து இணையதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன், மாணவி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்தது. அந்த பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து விசாரணை நடத்துவதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பள்ளிக்கு சென்றார். ஆனால் அவர் விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை.

எனினும், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அழுத்தம் அதிகரிக்கவே ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம். இந்நிலையில், வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜகோபாலனிடம் காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, நங்கநல்லூரில் உள்ள ராஜகோபாலன் வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப் மேசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்திருந்தது தெரியவந்தது. சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை காவல்துறையினர் மீட்டனர்.

விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகவும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் தான், அந்தப் பள்ளியைச் சேர்ந்த மேலும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று காவல்துறை கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளித்திருக்கிறது. மேலும், ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை சென்னை விருகம்பாக்கத்திலுள்ள எழும்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, ஜூன் 8ஆம் தேதி வரை ராஜகோபாலனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

Contact Us