போதைப்பொருள் வழக்கில் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் கைது!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் உள்ள போதைப்பொருள் தொடா்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இதில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தது, பயன்படுத்தியது தொடர்பாக அவரின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி, ரியாவின் தம்பி சோவிக், வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்யப்பட்டனர். இதில் ரியா உள்பட பலர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்தநிலையில் சுஷாந்த் சிங்குடன் வீட்டில் தங்கியிருந்த நண்பர் சித்தார்த் பிதானிக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில், அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த புதன்கிழமை சித்தார்த் பிதானியை கைது செய்தனர்.

பின்னர் அவர் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மும்பை அழைத்து வரப்பட்டார். மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அதிகாரிகள் அவரை ஆஜர்படுத்தினர்..அப்போது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் சித்தார்த் பிதானி போதைப்பொருள் வாங்கியது கண்டறியப்பட்டது.

மேலும் இவருக்கு போதைப்பொருள் தொடர்பாக நடிகை ரியா, சோவிக், சுஷாந்த் சிங்கின் மேலாளர், வேலைக்காரர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இடையே உள்ள நெருக்கம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும், எனவே அவர்களை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கோர்ட்டில் முறையிட்டனர்.

இதையடுத்து வரும் 1-ந் தேதி வரை சித்தார்த் பிதானியை காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

Contact Us