படகு கவிழ்ந்து கோர விபத்து: 50 பேர் பலி; 100 பேரின் கதி என்ன?

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நைஜர் மாகாணத்தில் இருந்து வடமேற்கு மாகாணம் கெப்பிக்கு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த படகில் சுமார் 200 பயணிகள் இருந்தனர். மேலும் மணல் மூட்டைகள் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவையும் இந்த படகில் ஏற்றிச் செல்லப்பட்டன.

கெப்பி மாகாணத்தில் உள்ள பிரபலமான சந்தையில் விற்பனைக்காக இந்த மணல் மூட்டைகள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல் பெரும்பாலான பயணிகள் அந்த சந்தைக்கு செல்வதற்காகவே படகில் பயணித்தனர்.‌

இந்தநிலையில் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கெப்பி மாகாணத்தின் வாரா நகரில் உள்ள கைன்ஜி ஏரியில் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு இரண்டாக உடைந்து ஏரியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் மீட்புப் படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் தீவிர மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் அவர்களால் 20 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது.

பெண்கள் சிறுவர்கள் உட்பட 50 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் இந்த விபத்தில் 100-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அவர்கள் அனைவரும் நீருக்கு அடியில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. எனினும் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். படகில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி சென்றதால் பாரம் தாங்காமல் படகு இரண்டாக உடைந்ததாக நைஜீரியாவில் நீர்வழி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கெப்பி மாகாணத்தில் நடந்த படகு விபத்து ஒரு பேரழிவு என தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது நைஜீரியாவில் இந்த மாதத்தில் நடந்த 2-வது படகு விபத்தாகும். முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நைஜர் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Contact Us