அம்மாவுக்கு இறுதிச்சடங்கு.. காவல்துறை அதிகாரியின் அர்ப்பணிப்பு; நெகிழ்ந்துபோன மக்கள்!

ஒடிசாவின் கேந்திரபாராவில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி காலமான தனது தாயை தகனம் செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்கு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணம்? முந்தைய சூறாவளிகளான ஃபானி மற்றும் ஆம்பான் ஆகியவற்றால் ஏற்பட்ட சேதங்களை அவர் கண்டபின், சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்ற உதவ வேண்டும் என விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

மார்ஷகாய் பகுதியின் இன்ஸ்பெக்டர்-பொறுப்பாளர் கலந்தி பெஹெரா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பணிபுரிந்த அதே காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார்.மேலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மக்கள் சந்தித்த பாதிப்புகளை அவர் நேரில் இருந்து பார்த்தவர். இதனால் மனிதவளம் மற்றும் வளங்களின் தேவையை புரிந்து கொண்டு மக்களை வெளியேற்றும் செயல்முறைக்கு உதவி வருகிறார்.

இதுகுறித்து பெஹெரா தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியதாவது, “யாஸ் சூறாவளி மார்ஷாகாய் காவல் எல்லைக்குட்பட்ட ஐந்து பஞ்சாயத்துகளின் தாழ்வான கிராமங்களில் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதற்காக மக்களை அவர்களுது குடியிருப்பு பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு மாற்ற வேண்டியிருந்தது.” என்று கூறியுள்ளார்.

மேலும் பெஹெராவின் 85 வயதான தாய், அவருடன் மார்ஷாகாயில் வசித்து வந்தார். சமீபத்தில் தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக மே 21ம் தேதி அன்று காலமானார். தனது சொந்த கிராமமான ஜஜ்பூரின் பிஞ்சார்பூரில் தாயின் இறுதி சடங்குகளைச் செய்வதற்காக சடலத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர் அன்று இரவே மார்ஷகாய்க்கு மீண்டும் திரும்பினார். புயல் காரணமாக கிராமப்பகுதிகளில் இருந்தவர்களை வெளியேற்றும் பணியில் இணைந்தார்.

பெஹெராவும் அவரது சகாக்களும் சூறாவளியில் சிக்குவதற்கு முன்பு தாழ்வான பகுதிகளில் இருந்து குறைந்தது 2,100 பேரை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியுள்ளனர். இதையடுத்து பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் மறுசீரமைப்பு பணிகளில் உதவினேன். பிறகு கடந்த வியாழக்கிழமை என் கிராமத்திற்கு என் தாயின் இறுதி சடங்குகளைச் செய்ய புறப்பட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற தனிப்பட்ட சோகங்களை எதிர்கொண்டாலும் கூட பெஹெரா தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என கேந்திரபரா எஸ்.பி. மட்கர் சந்தீப் சம்பாத் அவரது அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க லாக்டவுன் போடப்பட்டுள்ள நேரத்தில் புயல் வந்தது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான அனுபவமிக்க மற்றும் திறமையான குழுவின் திட்டமிட்ட வியூகம் மூலம் பெரிய அழிவு மற்றும் உயிரிழப்புகள் எதுவும் இல்லாமல் ஒடிசா தப்பியது. யாஸ் புயலை நிர்வகிப்பதில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அரசாங்க முகாம்களுக்கு பாதுகாப்பாக வெளியேற்றியது தான்.

Contact Us