கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி எறியும் அதிர்ச்சி வீடியோ வெளியானதால் பரபரப்பு!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை பாலத்தின் மேல் இருந்து இருவர் ஆற்றினுள் வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் புன்னிய நதியான கங்கையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வரும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. உத்தரப்பிரதேச மாநிலத்திலும், அண்டை மாநிலமான பீகாரில் உள்ள கங்கை நதியில் உடல்கள் மிதந்தன, சில உடல்கள் கரையோரம் ஒதுங்கின. நாய் உள்ளிட்ட விலங்கினங்கள் உடல்களை சேதப்படுத்தின. இந்தக் காட்சிகள் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்ததால், அந்தப் பகுதிகளில் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டது.

பகுதி மக்களால் வறுமையில் காரணமாகவும், போதிய விழிப்புணர்வு இல்லாததுமே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. எனினும், இது குறித்து விசாரிக்குமாறும், உடல்கள் கங்கையில் தூக்கி எறியப்படாமல் பாதுகாப்பு அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய நீர்வளத்துறை கேட்டுக்கொண்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சாலை மேம்பாலம் ஒன்றின் மீது இருந்து கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை இருவர் ரப்தி நதியில் தூக்கி எறியும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.

பிளாஸ்டிக் பையால் மூடப்பட்ட அந்த சடலத்தை பாலத்தின் மீது இருவர் தூக்கி வைக்கின்றனர். அந்த இருவரில் ஒருவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருக்கிறார். இந்த வீடியோவை அந்த பாலத்தில் பயணம் செய்த தம்பதியர் காரில் இருந்தவாறு எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

https://twitter.com/Benarasiyaa?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1398901536130945028%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fcoronavirus-latest-news%2Fshocking-video-shows-covid-patients-body-being-thrown-in-river-in-up-aru-473043.html

இது குறித்து விசாரித்த பல்ராம்பூர் சுகாதாரத்துறையினர் இச்சம்பவம் கடந்த மே 28ம் தேதி நடந்ததாக கூறுகின்றனர். மே 25ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே 28ம் தேதி அவர் மரணமடைந்ததால் அவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த உடலை அவர்கள் மேம்பாலத்தில் இருந்தவாறு ரப்தி நதியில் எறிந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் இறுதிச் சடங்குகள் செய்வதற்காக குடும்பத்தினரிடம், உறவினர்களிடம் வழங்கப்படுகிறது. தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Contact Us