முதல்வர் காரை நிறுத்திய 7 ம் வகுப்பு மாணவி; யாரும் இதை எதிர்பார்க்கவில்லை!

கோவையில் மடிக்கணினி வாங்க சேமித்து வைத்திருந்த 14,800 ரூபாய் பணத்தை கொரொனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பள்ளி மாணவி நிவேதிதா என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வு பணிகளுக்கு பின்னர் இன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை,ஈரோடு, சேலம், திருப்பூர்,நீலகிரி ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பினை முடித்து கொண்டு விமான நிலையம் புறப்பட்டு சென்ற போது, ஆட்சியர் அலுவலக வாசலில் நின்று இருந்த சிறுமியை பார்த்து வாகனத்தை நிறுத்தினார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வந்த சிறுமி தன் பெயர் நிவேதிதா என்றும், தான் மடிக்கணிணி வாங்க சேமித்த பணத்தை , கொரொனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக கூறி , தான் சேமித்து வைத்து இருந்த 14,800 ரூபாய்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.இதனை பெற்று கொண்ட முதலமைச்சர், அந்த சிறுமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

இது குறித்து பேசிய மாணவியின் தந்தை தாமோதரன், சவுரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், தனது இளைய மகள் நிவேதிதா 7ம் வகுப்பு படித்து வருவதாகவும் மடிக்கணினி வாங்க சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க விரும்பியதால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியதாக தெரிவித்தார்.

அட்வர்டைசிங் தொழில் செய்து வரும் தாமோதரன், கொரோனா முதல் அலையின் போது பணியில் இருந்த காவலர்களுக்கு உணவு,இளநீர் ஆகியவற்றை வழங்கியதாகவும், இதை பார்த்த நிவேதிதா கொரோனா இரண்டாம் அலை வந்த நிலையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தனது சேமிப்பை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

ஏற்கனவே பல்வேறு சிறுவர், சிறுமிகள் ஆர்வத்துடன் கொரொனா நிவாவரணத்திற்காக தங்களின் சேமிப்புகளை வழங்கி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த நிவேதிதாவும் தனது பங்களிப்பாக மடிக்கணிணி வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்கியுள்ளார். தங்களது ஆசைகளை பூர்த்தி செய்வதை விட , தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்ட்டப்படக்கூடாது என்பதற்காக தங்களின் சேமிப்புகளை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி இந்த மழலைகள் மனிதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போன்று முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு முதலமைச்சர் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது..

Contact Us