ஹலோ.. நான் சசிகலா பேசிறேன் …! ஆடியோ தொண்டர்களை குழப்ப சசிகலா எடுக்கும் முயற்சி!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆகி சென்னைக்கு காரில் வந்த போது, சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை திரும்பிய அவரை, சில அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்தனர். அரசியலில் அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒரு அதிரடி அறிவிப்பை சசிகலா வெளியிட்டார். அதில், ‘நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்’ என்று கூறினார்.

இந்த அறிவிப்பின் மூலம் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். அதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், அ.தி.மு.க. தோல்வியை சந்தித்து, ஆளும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சசிகலா விஸ்வரூபம் எடுத்து வருகிறார். சசிகலா, தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சசிகலா தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்ற தொண்டரிடம், சசிகலா பேசிய செல்போன் உரையாடல் நேற்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஒன்றும் கவலைப்படாதீங்க, கட்சியைக் கண்டிப்பா சரி பண்ணிடலாம், கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, கொரோனா குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன் என்று கூறினார். இது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதுபோல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவர், பேராவூரணி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிமுக ஒன்றிய துணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு திடீரென தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர் உங்களிடம் “சின்னம்மா பேச வேண்டுமாம்” என்றதும் ஒரு கணம் தடுமாறிய வினோத், நம்மை யாரோ கலாய்க்கிறார்கள் என்று நினைத்து நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறார். அப்போது சசிகலாவின் குரல்கேட்டு ஒருகணம் திக்குமுக்காடி விட்டதாக சொல்லும் வினோத் மேலும் நம்மிடம் பேசியபோது.

தேர்தலுக்குப் பிறகு துவண்டு போயிருந்த எங்களை திடீரென சின்னம்மா சசிகலா தொலைபேசியில் அழைத்தது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. முதலில் நான் தொலைபேசியை எடுத்ததும் பேசிய சின்னம்மாவின் உதவியாளர், சின்னம்மா உங்களிடம் பேச வேண்டும் என்று தெரிவித்தது நம்ப முடியாததாக இருந்தது. ஆனால், அவரின் குரலை கேட்டதும் அந்த வார்த்தைகளை என்னால் வர்ணிக்க முடியவில்லை. ஒரு கடைக்கோடி தொண்டனாக இருக்கின்ற என்னை தொலைபேசியில் அழைத்து பேசியதோடு, தற்போது உள்ள கொரோனா தொற்று காலத்தில் நீங்களும் உங்கள் குடும்பமும் மிகவும் கவனமாக இருங்கள் என்றும் சொன்னது மிகவும் ஆறுதலாக இருந்தது” என்றார்.

மேலும், “ கட்சியை நான் பார்த்துக்கிறேன். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்தார். அதிமுகவின் கடைக்கோடி தொண்டனான என்னிடம் சசிகலா தொலைபேசியில் பேசியது ஒவ்வொரு கடைக்கோடி தொண்டனுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, “சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அ.தி.மு.க தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார், அ.தி.மு.க.வை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது, ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், சசிகலா பேசும் நபர்கள் அ.ம.மு.கவை சேர்ந்தவர்கள் என்ற கே.பி.முனுசாமி, ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Contact Us