Covid-19: 20 லட்சம் பில்..16 லட்சம் கட்டியும் இறந்தவரின் உடலை தர மறுத்து விட்டனர்!

கோவையில் கொரோனா சிகிச்சைக்காக 20 லட்சம் கட்டணம் விதித்து இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காதர் என்பவர் உயிரிழந்தார்.16 லட்சம் கட்டணம் செலுத்திய பின்னரும் மீதி பணத்தை செலுத்தி விட்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் தலையிட்டு உடலை பெற்றுக்கொடுத்தனர்

கோவை குனியமுத்தூர் திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த காதர் என்பவர் கொரொனா தொற்று காரணமாக சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கட்டணமாக 20 லட்ச ரூபாயினை மருத்துவமனை நிர்வாகம் விதித்து இருந்தது.இதில் 16 லட்ச ரூபாயினை காதர் குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.16 லட்சம் கட்டணம் செலுத்திய நிலையிலும் மீதமுள்ள 4லட்ச ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என கூறிய மனு மருத்துவமனை நிர்வாகம் , உடலை கொடுக்க மறுப்பு தெரிவித்தது.

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கும் நிலையில் , கூடுதல் கட்டணம் வசூல் செய்ததுடன் , இறந்தவரின் உடலை கொடுக்காமல் செயல்படும் மனு மருத்துவமனை நிர்வாகம் குறித்து, சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் காதரின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கொரொனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்,மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்திரவிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று நேரில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கும்படி காதரின் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரி சித்திக் உத்திரவிட்டார்.

Contact Us