ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி; யுத்தத்தை மிஞ்சிய பேரிழப்பு; நடந்தது என்ன?

உத்தரபிரதேசத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து மாடி வீடு தரைமட்டமானது. இதில், 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் டிக்ரி கிராமத்தை சேர்ந்தவர் நூருல் ஹசன். 2 மாடிகள் கொண்ட வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், மாடி வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், உதவி மைய எண் மூலமாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், இரவு நேரத்திலேயே சம்பவ இடத்துக்கு வந்தனர். பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 8 பேர் உயிருடன் புதைந்து பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் லக்னோவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

பலியானவர்களின் பெயர்கள் நிசார் அகமது (வயது 35), ரூபினோ பனோ (32), ஷம்சத் (28), சைருனிஷா (35), ஷாபாஸ் (14), நூரி சபா (12), மிராஜ் (11), முகமது சொயிப் (2) என்று தெரிய வந்துள்ளது. 4 குழந்தைகள் உள்பட 8 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய தடயவில் அறிஞர்கள், மாதிரிகளை சேகரித்தனர். முதல் பார்வையில், இது சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக தோன்றுவதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

உயிரிழப்பு ஏற்பட்டதற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Contact Us