125 ஆண்டு வரலாற்றை.. ஒரே நாளில் சுக்கு நூறாக நொறுக்கிய கான்வே’!.. உலக சாதனை!..

நியூசிலாந்து பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, இங்கிலாந்து மண்ணில் செய்துகொண்டிருக்கும் சம்பவம் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

devon conway hits double ton in england breaks record

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 2) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

நியூசிலாந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. இதில், அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய டெவோன் 136 ரன்களுடன் களத்தில் இருந்தார். சீனியர் வீரரைப் போல, ஷாட்ஸ் தேர்வில் எந்தவித குழப்பமும், பதட்டமும் இன்றி விளையாடினார். அந்த அணுகுமுறை அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயல்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் நடக்கிறது. கடைசியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தான் சதமடித்திருந்தார். அதன் பிறகு, கான்வே தான் இப்போது அடித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 3) 2வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதிலும், சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய கான்வே 150 ரன்களைக் கடந்தார். அப்போது அவர் 156 ரன்கள் எடுத்த போது, இங்கிலாந்து மண்ணில் அறிமுக டெஸ்ட் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் எனும் சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன் 1896ம் ஆண்டு, ரஞ்சித்சிங்ஹ்ஜி என்பவர், இங்கிலாந்தில் தனது அறிமுக போட்டியில் 154 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனை கான்வே இன்று முறியடித்துள்ளார். இதற்கு இங்கிலாந்து ரசிகர்களே எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை செலுத்தினர்.

டெவான் கான்வே தென் ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கிரிக்கெட் மீது கொண்ட மோகத்தால், அங்கு அவரிடம் இருந்த கார் உட்பட அனைத்து சொத்துகளையும் விற்று நியூசிலாந்தில் குடியேடினார். தென் ஆப்பிரிக்காவில் அவருக்கு மறுக்கப்பட்ட கிரிக்கெட் வாய்ப்பு நியூசிலாந்தில் கிடைத்தது. தன்னுடைய கடின உழைப்பினால் படிப்படியாக முன்னேறிய கான்வே, இன்றைய நிலையில், நியூசிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

மேலும் 125 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாதனையை தகர்த்துவிட்டோம் என்ற கர்வத்தில் ஆடாமல், தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது விடாமுயற்சியால் 200 ரன்களை இன்று (ஜூன் 3) இங்கிலாந்து மண்ணில் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இன்று தன்னுடைய முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த நியூசிலாந்து அணி, 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த நிலையிலும் கூட, 347 பந்துகளில் 200 ரன்களை அதிரடியாக குவித்த கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலேயே இருந்தார்.

இவருடைய இந்த அசாத்தியமான ஆட்டம் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us