கொரோனாவில் இறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட பெண்; வீட்டில் வந்து நின்ற அதிர்ச்சி!

திருப்பதியில் இறந்துவிட்டார் என்று புதைக்கப்பட்ட மூதாட்டி மீண்டும் வீட்டுக்கு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் போதிலும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கொரோனா தடுப்பு நெறிகளை பின்பற்றி அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் என புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்ப வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாபேட்டை நகரை சேர்ந்தவர் கிரிஜம்மா. 70 வயது மூதாட்டியான கிரிஜம்மா கொரோனா தொற்று காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மே 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று மருத்துவமனை ஊழியர்கள் அவருடைய கணவருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து கொரோனா விதிகளை பின்பற்றி கிரிஜம்மா உடல் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் கிரிஜம்மா மரணத்தை முன்னிட்டு அவருடைய வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது. வீட்டில் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று உடல் நிலை தேறி கிரிஜம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

கிரிஜம்மா உயிருடன் வீடு திரும்பியதால் அவருடைய கணவர், உறவினர்கள் ஆகியோர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகளின் அசட்டை காரணமாக உயிருடன் உள்ள கிரிஜம்மா இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கிரிஜம்மாவின் உடல் என்று கருதி புதைக்கப்பட்டது யாருடைய உடல் என்ற குழப்பமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

Contact Us