இரவு உணவிற்கு சாலட் தராததால் மனைவியை கொன்ற கொடூரன்..

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் வசித்து வரும் நபர் ஒருவர், தனது இரவு உணவிற்கு சாலட் வைக்க தவறிய மனைவியை கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த அந்த நபர் மண்வெட்டியால் மனைவியை கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரின் 22 வயது மகனையும் படுகாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கோக்வான் ஜலல்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

முர்லி குமார் என்ற அந்த நபருக்கு வயது 48 இருக்கும். குடிபோதையில் வீட்டிற்கு வந்த முர்லி குமார், தனது இரவு உணவிற்கு சாலட் கொண்டு வருமாறு அவரது மனைவி சுதேஷிடம் கேட்டுக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், சுதேஷ் சாலட் கொண்டு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது மகன் அஜய் முன்னிலையிலேயே மனைவியை கொடுமைப்படுத்த தொடங்கினார்.

பிறகு வீட்டிலிருந்து கோபமாக கிளம்பிய குமார், நள்ளிரவில் மீண்டும் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது தனது மனைவி தூங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை மண்வெட்டி மூலம் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தாயைக் காப்பாற்ற முயன்ற தனது மகனையும் குமார் தாக்கியுள்ளார். 48 வயதான அந்த நபர் தனது மனைவியை இரத்த வெள்ளத்தில் அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுதேஷ் மற்றும் அவரது மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மனைவி சுதேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த மகன் அஜய் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  போலீஸ் சூப்பிரண்டு அமித் சக்சேனா கூறியதாவது, “குற்றம் சாட்டப்பட்டவருக்கும், அவரது மனைவி மற்றும் மகன் இடையே சண்டை வெடித்தது. குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டை விட்டு வெளியேறி, நள்ளிரவில் திரும்பி வந்து அவரது மனைவி மற்றும் மகனைத் தாக்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கையில், தப்பியோடிய கணவர் மீது பாபர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவர்களின் கட்டுப்பாடற்ற கோபத்தின் காரணமாக ஏற்படும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில் கூட, ராஜஸ்தானின் கோட்டாவில் ஒரு நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட  வாக்குவாதத்தால் மனைவியை கோடாரியால் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது உடலை 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மனைவியை கொன்ற கோடாரியை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், டெல்லியின் புத் விஹாரில் வசிக்கும் ஒரு நபர், திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு வேறொருவருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகித்ததை அடுத்து பொதுவெளியில் மனைவியை 25 முறை கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Contact Us