போங்கடா டேய்.. அந்த அம்மையார் அதிமுகவிலேயே இல்லை’; எடப்பாடி அதிரடி!

சசிகலா அதிமுகவில் இல்லை என்றும், திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஆடியோவை வெளியிட்டிருப்பதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, கோதாவரி – காவிரி திட்டத்தை இணைப்பது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறினார்.

கொரோனா தொற்று பரிசோதனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பழனிசாமி, கடந்த ஆண்டை விட தற்போது நான்கு மடங்கு தொற்று அதிகரித்துள்ளதாகவும், பரிசோதனை முடிவுகளை மூன்று, நான்கு நாட்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைந்து அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதால் வர இயலவில்லை என்றும், தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது எனவும் தெளிவுபடுத்தினார். அப்போது சசிகலா தொடர்பான ஆடியோ வெளியிடப்படுவது குறித்து எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பழனிசாமி, சசிகலா அதிமுகவில் இல்லை என்றும், அவர் அமமுக தொண்டர்களோடு பேசியிருப்பதாகவும் விளக்கினார்.

Contact Us