பெண்ணை கழுத்தறுத்து படுகொலை செய்த இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற கிராமத்தினர்!

கண்டிரிகை கிராமத்திற்குட்பட்ட கொண்டாரெட்டி நகரைச் சேர்ந்தவர் 24 வயதான சின்னா. இவர் அதே ஊரை சேர்ந்த சுஷ்மிதா என்ற இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சுஸ்மிதா சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். சின்னா தொடர்ந்து தனது காதலை சுஷ்மிதாவிடம் கூறி வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் வேலையில்லாமல் சுற்றித்திரிந்த சின்னாவை சுஷ்மிதாவுக்கு பிடிக்காத காரணத்தால் அவரது காதலை ஏற்க மறுத்தார். மாத கணக்கில் சுஷ்மிதா பின் சுற்றி வந்த சின்னா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடரந்து வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும சுஷ்மிதா மனம் மாறவில்லை. இந்தநிலையில், வியாழக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்த சுஷ்மிதாவிடம் பேசுவதற்காக சின்னா சென்றுள்ளார்.

அங்க சுஷ்மிதாவிடம் தன்னை காதலிக்குமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் கோபத்தில் சின்னாவை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னா தான் எடுத்துச் சென்ற கத்தியால் சுஷ்மிதாவின் கழுத்தை அறுத்து கொலைசெய்தார். அப்போது, அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சின்னாவை பிடிக்க முயன்றனர்.

ஆனால் சின்னா தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அதற்குள்ளாக அவரைப்பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். வீட்டிற்கு வெளியே அவரை இழுத்து வந்த பொதுமக்கள் கற்களால் அடித்து தாக்கினர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சின்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சித்தூர் போலீசார் 2 உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் சின்னாவை கொலை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us