இரவில் மகள் அறையில் காதலன்.. அடித்து கொன்று துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைத்த தந்தை

ஆந்திரப்பிரதேசத்தில் மகளின் காதலனை அவரது தந்தை கொன்று அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (23). கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் தனசேகரை காணவில்லை.

அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதில் தனசேகர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் என்ற விடையம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் தனசேகரின் செல்போனை ஆய்வு செய்ததில் மே 22 ஆம் தேதி அந்த பெண்ணின் தந்தை பாபு, தனசேகரிடம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து பாபுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் தனசேகரை கொலை செய்து தன்னுடைய வயலில் புதைத்துவிட்டதாக பாபு கூறியிருந்தார். விவசாய நிலத்திற்கு காவலுக்கு செல்லும் பாபு சம்பவத்தன்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது மகளின் அறையில் தனசேகர் இருந்ததை பார்த்தவுடன் பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் தனசேகரை தாக்கியதால் அவர் உயிரிழந்துவிட்டார். பின்னர் அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளார். ஆனால் மறுநாள் உடல் மேலே எழும்பினால் பிரச்சினையாகிவிடும் என அச்சமடைந்துள்ளார்.

இதனால் தனசேகரின் உடலை கிணற்றிலிருந்து எடுத்து கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி நிலத்தில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து பாபுவை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Contact Us