திருமணமான இரண்டாம் நாளில் மாயமான இளைஞர்.. அடித்துக்கொன்ற முன்னாள் காதலி – பரபரப்பு வாக்குமூலம்!

மத்தியப்பிரதேசத்தில் திருமணமான இரண்டாம் நாளில் மாயமான இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் சோனு படேல். 26 வயதான சோனு படேலுக்கு கடந்த மே 14-ம் தேதி திருமணமாகியுள்ளது. திருமணமான இரண்டாம் நாளில் இருந்து அதாவது மே 16-ம் தேதியில் இருந்து சோனுவை காணவில்லை. மொபைல் போன் பழுதாகிவிட்டது அதனை பழுதுபார்க்க கொடுத்துள்ளேன் வாங்கி வருகிறேன் என வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சோனு வெளியில் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சிகோரா காவல்நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சோனு மாயமான வழக்கில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில்தான் சிகோரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இளைஞரின் ஒருவரின் சடலம் இருப்பதாக மே 24-ம் தேதி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றினர். போலீஸார் நடத்திய விசாரணையில் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சோனு படேல் என்பது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், “ மே14-ம் தேதி சோனுவுக்கு திருமணமாகியுள்ளது. 16-ம் தேதியில் இருந்து அவரை காணவில்லை. உறவினர்களிடன் ரிப்பேருக்கு கொடுத்த போனை வாங்கி வர சென்றதாக கூறியுள்ளார். சோனுவுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரித்தோம். சோனுவின் சம்மதத்தின் பேரில்தான் திருமணம் நடந்துள்ளது. உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் சோனுவுக்கு அவரது உறவினருமான மதுவுக்கு இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில்தான் மாயமான சோனுவின் உடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து மதுவிடம் விசாரணை மேற்கொண்டதில் சோனுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சோனுவின் தங்கைக்கும் மதுவின் சகோதரனுக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து சோனுவுக்கும் – மதுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் சோனுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு. திருமணமும் நடந்து முடிந்தது. இந்நிலையில்தான் சோனு, மதுவை பார்க்க வந்துள்ளார். சோனு மீது ஆத்திரத்தில் இருந்த மது அவரை கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறினார்.

திருமணத்துக்கு சில நாள்களுக்கு முன்பு மதுவுடன் சோனு நெருக்கமான வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை மணமகள் வீட்டில் காண்பித்தால் திருமணம் தடைப்படும் என்று கூறியதாக மது விசாரணையில் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக’ தெரிவித்தனர்.

Contact Us