சாலையில் தேங்கிய மழைநீர்.. ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்டிய எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்!

சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் கழிவுநீர் கால்வாய் குழாயை சரியாக சுத்தம் செய்யவில்லை எனக் கூறி ஒப்பந்ததாரர் தலையில் குப்பை கொட்டிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியின் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை மாநகராட்சியின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மிகவும் சிரமத்துக்கு இடையே பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

மும்பை வடக்கு பகுதியில் உள்ள கந்திவலி தொகுதியை சேர்ந்த சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ திலிப் லண்டே இந்த பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சாலையில் இருந்த கழிவுநீர் கால்வாய்கள் வழியாக மழைநீர் செல்லாமல் சாலையில் தேங்கி இருந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். அவர் மீது குப்பைகளை கொட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை ஊழியர்கள் சிலர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒப்பந்ததாரை அழைத்த சிவசேனா எம்.எல்.ஏ சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் அமரும் படி கூறுகிறார். அந்த நபர் தயக்கத்துடன் நிற்க அவரை மிரட்டி சாலையில் அமரவைக்கிறார். அந்த நபரும் மழைநீர் தேங்கிய சாலையில் அமர்ந்துக்கொண்டார்.

எம்.எல்.ஏ. திலிப் லண்டேவுடன் வந்திருந்த மற்ற நபர்கள் அந்த நபரை மிரட்டி சாலையில் நன்றாக அமரும்படி கூறினார். லண்டே தன்னுடன் வந்திருந்த சில நபர்களை அழைத்து ஒப்பந்ததாரர் மீது குப்பைகளை கொட்டும்படி கூறுகிறார். சாலையில் தேங்கி இருந்த அசுத்தமான குப்பைகளை அள்ளி மலைப்போல் அந்த நபர் மீது குவித்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய சிவசேனா எம்.எல்.ஏ திலிப் லண்டே, “அந்த காண்ட்ராக்டரை கடந்த 15 நாள்களுக்கு மேலாக அழைத்தேன். சாலையை சரிசெய்யுமாறு கூறினேன். அவர் நாங்கள் சொன்னதை கேட்கவில்லை. சிவசேனாவை சேர்ந்தவர்கள் இந்த பணியை செய்து வருகிறார்கள். இதை கேள்விப்பட்டதும் அந்த நபர் இங்கு ஓடிவந்தார். இது அவருடைய பொறுப்பு இந்த பணிகளை அந்த நபர் செய்திருக்க வேண்டும்” என்றார்.

Contact Us