3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய கல்யாண ராணி இவள்தான்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த வாலிபர் சுனில் குமார்( வயது 29) .தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.  இவரிடம் திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகி உள்ளார். சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்ட சுகாசினி அவரை காதல்வலையில் வீழ்த்தியுள்ளார்.
தான் பெற்றோர் இல்லாத  ஒரு ஆதரவற்ற பெண் என்று கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை வாங்கி கொடுத்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி இரண்டு கட்டமாக 6 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதி சுனிலிடம் இருந்து தங்களுக்கு தெரியாமல் பணம் பெற்றதை அறிந்த அவரது பெற்றோர்கள் சுகாசினியிடம் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளனர். இதையையடுத்து சுகாசினி மாயமானதாக கூறப்படுகின்றது.
அவர்கள் தொலைபேசியில் சுகாசினியை தொடர்பு கொள்ள முயன்றார்கள் , ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ தவறாக உணர்ந்த சுனில் ஆவணங்களை சரிபார்த்தார்.  ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து ஒரு மகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதற்கிடையில், சுனிகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி , தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தருவதாகவும் , போலீசாரை நாடினால் வீணாக பிரச்சினை வரும் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.
வெங்கடேசை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் செல்போனிற்கு அனுப்பி அதிர்ச்சியூட்டி உள்ளார் சுகாசினி..!

Contact Us