பெருந்தொற்றின் போது தொலைந்த தங்க நாணயம் கொரோனா தொற்றுக் காலத்தில் கண்டெடுப்பு: தங்க நாணயத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா?

பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட பியூபோனிக் ப்ளேக் பெருந்தொற்று காலத்தில் தொலைந்து போன தங்க நாணயத்தை உலோகங்களை அடையாளம் பார்த்து கண்டுபிடிக்கும் ஒருவர் கண்டெடுத்து இருக்கிறார். மன்னர் மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தை ஆட்சி செய்த காலம் அது.

அந்த 23 கேரட் சுத்தமான தங்க நாணயத்தை ‘லியோபர்ட்’ என்று அழைக்கிறார்கள். லியோபர்ட் தங்க நாணயத்தோடு ‘நோபல்’ என்கிற தங்க நாணயமும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த நாணயங்கள் பிரிட்டனில் இருக்கும் நார்ஃபோக் கவுன்டியில் ரீபம் என்கிற சிறிய நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

லியோபர்ட் நாணயம் 1344ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே அந்த நாணயம் விலக்கிக்கொள்ளப்பட்டது என்கிறார் தகவல் தொடர்பு அதிகாரி ஹெலென் கீகே. மேலும் லியோபர்ட் ரக நாணயங்கள் மிக அரிதாகவே மிஞ்சின எனவும் குறிப்பிடுகிறார் அவ்வதிகாரி.

இந்த காசுகளின் மதிப்பு தற்போது சுமார் 12,000 பவுண்ட் ஸ்டெலிங். இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 12 லட்சம் ரூபாய். இந்த காசுகளை சமூகத்தில் உயர் நிலையில் வாழும் யாரோ ஒருவர் வைத்திருந்திருந்திருக்கலாம் என்கிறார் ஹெலென் கீகே.

லியோபர்ட் ரக நாணயங்கள் மற்ற நாணயங்களோடு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை. ஆனால் இப்போது அரிதான 1351 – 1352 காலத்தைச் சேர்ந்த மூன்றாம் எட்வர்டின் நோபல் நாணயத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Contact Us