வடகொரியாவின் பரிதாப நிலை: ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300க்கு விற்பனை; கோத்தா மாதிரி கிம் நாட்டை நாசமாக்கிட்டு!

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். மீண்டும் ஒரு வரலாற்று உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வடகொரியாவின் உள்நாட்டு விவகாரங்களை அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு, ராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வருகிறது. அங்கு உணவுப் பஞ்சம் நிலவுவதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன.

இந்தநிலையில் வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் நிலவிவரும் உணவு தட்டுப்பாடு தொடர்பாக, கட்சியினர் உடன் உயர்மட்டக் குழு ஆலோசனையில் விவாதித்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் 1994ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை ஏற்பட்ட உணவுப்பஞ்ச காலத்தை சமாளித்தது போல் தயாராகுமாறு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் வட கொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை, அதிபர் கிம்மே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று சி.என்.என்.உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில், சிறிய காபி பாக்கெட்டின் விலை, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏழாயிரம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஒரு கிலோ வாழைப்பழம் மூன்றாயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சி.என்.என்.தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வட கொரியா, உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால், அக்டோபருக்குள் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் என எச்சரித்தது.

வட கொரியாவில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் கொரோனா பரவல் முதன்மையானதாக கருதப்படுகிறது. கொரோனா பரவலைத் தொடந்து, வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை முற்றிலுமாக மூடியது.

குறிப்பாக, தனது நட்பு நாடான சீனாவுடனான வர்த்தக தொடர்பை நிறுத்தியதால் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உணவு, உரம், எரிபொருளுக்கு வடகொரியா முற்றிலுமாக சீனாவையே நம்பியுள்ளது. அணுஆயுதப் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொண்டதால், அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

1990களில் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, வட கொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது அப்போது அப்பஞ்சத்தில் சிக்கி லட்சக்கணக்கானோர் உயிர் நீத்தனர். இப்போது மீண்டும் அப்படியொரு சவாலை வடகொரியா எதிர்கொண்டுள்ளது.

Contact Us