திருமணம் செய்ய சென்றபோது காதலி கண்முன்னே வாலிபர் படுகொலை பெண்ணின் குடும்பத்தினர் வெறிச்செயல்!

திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா (வயது 21). கேட்டரிங் படித்து உள்ளார்.

நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி முல்லைநகரை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் பரமேஸ்வரி (20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

பாரதிராஜாவும், பரமேஸ்வரியும் நத்தத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்

இவர்கள் காதலிப்பது பரமேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பரமேஸ்வரியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். பரமேஸ்வரி இதுபற்றி காதலன் பாரதிராஜாவிடம் தெரிவித்தார். இதையடுத்து பாரதிராஜா மோட்டார்சைக்கிளில் மூங்கில்பட்டி முல்லை நகருக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.

பின்னர் அவர் பரமேஸ்வரியை செல்போனில் தொடர்புகொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், உடனே புறப்பட்டு வரும்படியும் கூறினார். அதன்பேரில் பரமேஸ்வரி அங்கு புறப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து இருவரும் அங்கிருந்து புறப்பட்டு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

கல்லால் தாக்கி கொலை

இதனிடையே பரமேஸ்வரி வீட்டில் இருந்து புறப்பட்டு காதலனுடன் சென்றது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமேஸ்வரியின் தந்தை ராசு, தாயார் அழகுநாச்சி, அண்ணன்கள் மலைச்சாமி (34), பாலகுமார் (28) ஆகியோர் மோட்டார்சைக்கிள்களில் விரட்டி சென்று பாரதிராஜாவை வழிமறித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி உள்பட 4 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே காதலி கண் முன்னே துடிதுடிக்க பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த பரமேஸ்வரி துக்கம் தாங்காமல் கதறி துடித்தார். பின்னர் அவர்கள் பரமேஸ்வரியை அங்கிருந்து தங்களுடன் அழைத்து சென்று விட்டனர்.

4 பேர் கைது

தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாரதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரியின் பெற்றோர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பரமேஸ்வரி அவரது உறவினர் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

Contact Us