நோய்த்தொற்று அச்சத்தால் 5 வயது மகளை குத்திக் கொலை செய்த தாய்!

இங்கிலாந்தில் கொரோனாவினால் மரணமடைந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டு, தான் பெற்ற 5 வயது மகளை 15 முறை கத்தியால் குத்திய இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 36 வயதாகும் சுதா மற்றும் அவருடைய கணவர் சுகந்தன் சிவானந்தம், மற்றும் அவர்களின் 5 வயது மகளான சயாகி ஆகியோர் லண்டனில் உள்ள மொனார்ச் பரேட் எனும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சுதாவுக்கும், சிவானந்தத்திற்கும் 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்று அப்போதிலிருந்தே அவர்கள் இருவரும் லண்டனில் வசித்து வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன்னர் வரை இவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவுமே சென்றிருக்கிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் சுதா – சிவானந்தம் தம்பதியரின் வாழ்க்கையில் புயலாக வீசியது என்றே கூறலாம். கொரோனா காரணமாக ஊரடங்கு, தனிமை என இருந்ததால் சுதாவிற்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அதனால் உயிரிழந்துவிடுவோம் என கருதிய சுதாவிற்கு இதுவே கடுமையான முடிவு ஒன்றை எடுக்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள் தன்னுடைய கணவர் வேலைக்காக வெளியே புறப்பட்ட போது அவரை வெளியே செல்ல வேண்டாம் என கெஞ்சியிருக்கிறார். இருப்பினும் கணவர் வெளியே சென்ற பின் அவருடைய நண்பர்களுக்கு கால் செய்து தனக்கு உடம்பு சரியில்லை என பேசியிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு கொரோனா பயம் எகிறியிருக்கிறது.

அதே நாள் மாலை 4 மணியளவில் சுதாவின் கணவர் சிவானந்தத்திற்கு அருகாமையில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் உங்களின் மனைவியும், மகளும் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக கூறப்பட அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த சிவானந்தம் ஓடோடி வீட்டுக்கு சென்றிருக்கிறார். அவருடைய மனைவி உயிருக்கு போராடிய நிலையில், அவருடைய 5 வயது மகள் இறந்து கிடந்துள்ளார். பின்னர் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

கொரோனா பயத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னுடைய 5 வயது மகளை, சுதாவே கத்தியால் 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததும், அதன் பின்னர் அவரும் அவருடைய வயிற்றில் பல முறை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் பின்னர் தெரியவந்தது. தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதால் தன்னுடைய மகளையும் அவர் கொலை செய்தது தெரியவந்தது.

தற்போது இந்த கொலை வழக்கில் இருந்து தன்னுடைய மனைவியை விடுவிக்க வேண்டும் என்றும், அவருக்கு மனநிலை சரியில்லாததன் காரணமாகவே இப்படியொரு முடிவை எடுத்திருந்ததாகவும், அவர் மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்காது எனவும் அவருடைய கணவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

சுதாவை பரிசோதித்த மனநல மருத்துவர் கொரோனா ஊரடங்கினால் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டதில் சுதாவுக்கு தீவிர மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். தற்போதும் சுதா மனநல சிகிச்சையில் இருந்து வருகிறார்.

கொரோனா அச்சத்தில் பெற்ற மகளையே கொலை செய்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகத்தில் பலருக்கும் இது போன்ற மன அழுத்தத்தை கொரோனா ஏற்படுத்தியிருப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Contact Us