தேசிய வில்வித்தை போட்டிக்கு தேர்வான வீரரின் மூக்கு, வாயை துண்டாக்கிய மர்ம நபர்; அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை ஆழ்வார்பேட்டையை  சேர்ந்தவர் ஆதித்யா( வயது21). இவரது தந்தை சுந்தர் பயோ- செப்டிக் டேங்க் தாயாரிக்கும் பிசினஸ் செய்து வருகிறார். ஆதித்யா, தமிழக அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்று வந்துள்ளார். 2019ஆம் ஆண்டு இவர் பல பதக்கங்களை குவித்துள்ளார். தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டியில் பங்கேற்பதற்காக அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

ஐ.சி.எஃப். வடக்கு காலனி, இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள தயான் சந்த் பயிற்சி அகாடமியில் ஆதித்யா, பயிற்சி பெற்றும், சிறுவர்களுக்கு வில்வித்தை பயிற்சி கொடுத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த வில்வித்தை பயிற்சி மையம் நேற்று திறக்கப்பட்டது. இதனால் இருசக்கர வாகனத்தில் வில்வித்தை பயிற்சி மையத்துக்கு வந்த ஆதித்யா நேற்று மதியம் 1 மணி அளவில் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

வில்வித்தை வீரர் ஆதித்யா

பயிற்சி மையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் மர்ம நபர் ஒருவர் ஆதித்யாவை வழிமறித்து அவசர தேவையின் காரணமாக தனது அப்பாவிற்கு போன் செய்ய வேண்டும் எனவும் தன்னிடம் இருந்த மொபைல் போன் தொலைந்து விட்டதாகவும் கூறி ஆதித்யாவிடம் மொபைல் போன் வாங்கி உள்ளார்.

பின்னர், ஆதித்யா எதிர்பார்க்காத நிலையில் மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆதித்யாவின் மூக்குப்பகுதியில் வெட்டியுள்ளார். இதில் ஆதித்யாவின் மூக்கு மற்றும் மேல் தாடை பகுதி முழுவதுமாக அறுந்து கீழே விழுந்துள்ளது. மேலும், அந்த மர்ம நபர் தொடர்ச்சியாக ஆதித்யாவை துரத்தி அவரது கால் மற்றும் முதுகுப் பகுதியில் வெட்டி காயப்படுத்தி ஆதித்யாவின் தலைமுடியை கத்தியால் அறுத்துள்ளார்.

ஆதித்யாவின் அலறல் சத்தம் கேட்டபொதுமக்கள் கற்களால் மர்ம நபரை தாக்கவே அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஐ.சி.எப் போலீசார் ஆதித்யாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

ஐ.சி.எஃப் போலீசாரின் விசாரணையில், தேசிய அளவில் நடக்கும் வித்தை போட்டியில் தமிழகத்தின் சார்பாக ஆதித்யா  பங்கேற்க உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பயிற்சி மையத்தில் பயிற்சி எடுப்பதற்காக ஜூலை மாதம் முதல் வாரம் பஞ்சாப் செல்ல தயாராகிக்கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.  மேலும் மர்ம நபர் ஆதித்யாவை கொலை செய்யும் நோக்கோடு தாக்கவில்லை எனவும் திட்டமிட்டு பழிவாங்குவதற்காக தாக்கி இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஆதித்யா தேசிய அளவில் நடக்கும் போட்டியில் பங்குபெற கூடாது என்பதற்காக இத்தகைய தாக்குதல் நடைபெற்றதா? அல்லது அவரது தந்தையின் தொழில் போட்டியின் காரணமாக இத்தகைய தாக்குதல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us