டிரோன் மூலம் பயங்கர தாக்குதல்… ஜம்மு சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்!

ஜம்மு-காஷ்மீர் விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப கட்டடத்தில் ட்ரோன்களை பயன்படுத்தி, இரண்டு முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு விமான நிலையத்துக்குள் இந்திய விமானப்படை தளம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில், ட்ரோன்கள் மூலம் அனுப்பப்பட்ட வெடிகுண்டு, விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப கட்டடத்தின் மேற்கூரையில் விழுந்து வெடித்தது. அடுத்த 5வது நிமிடத்தில் 2வது குண்டு தரையில் வெடித்தது. இந்த தாக்குதலில் விமானப்படை ஊழியர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பாதுகாப்புப்படை தளவாடங்கள் எதுவும் சேதமடையவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர், சிஆர்பிஎப் டிஐஜி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும்.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் விமானப்படை தளம் உள்ள நிலையில், சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே ட்ரோன்கள் அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது எல்லை தாண்டிய தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் குறி வைத்ததாகவும், ஆனால் அது நிகழவில்லை என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜம்முவில் 6 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதூரியா அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளதால், ஏர் மார்ஷல் விக்ரம் சிங்கை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு நிலவரத்தை விசாரித்துள்ளார்.

இச்சம்பவத்தின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான பதான்கோட் மற்றும் அவந்திப்பூர் விமானபடைதளங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Contact Us