ஓசாமா பின் லேடன் ஒரு தியாகி என்று புகழ்ந்து தள்ளிய இம்ரான் கான் – கடுப்பான அமெரிக்கா..

2011-ல் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரத்தைச் சுற்றிவளைத்த அமெரிக்கப் படைகள், பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்றன. ஒசாமா பின் லேடனின் மரணம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஒசாமா பின் லேடனைச் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் செயலுக்கு, பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டுகளைத் தெரிவித்தன.

சர்வதேச அளவில் தேடப்படும் மிக முக்கிய பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நபருக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பாகிஸ்தானுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் அரசு ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததே தெரியாது என்று திட்டவட்டமாகக் கூறியது. பின் லேடனின் மரணத்தைப் பெரும்பாலான பாகிஸ்தானின் பகுதிகள் சோகத்துடன் அனுசரித்தது என்றே சொல்லலாம். காரணம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அலறவைத்த பின் லேடனை தங்கள், நலனுக்காகச் செயல்படும் போராளியாக அவர்களில் பலர் நினைத்தனர். ஒசாமாவின் மறைவைத் தொடர்ந்து பாகிஸ்தானின் மறைமுக ஆதரவுடன் தற்போதுவரையிலும், அல் – கொய்தா பயங்கரவாத அமைப்பு அதிதீவிரமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் அளிப்பது, நிதி உதவி செய்து பயிற்சி முகாம்கள் அமைத்துத் தருவது என பாகிஸ்தான்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. இப்படியாக இருக்க, கடந்த ஆண்டு, ஜூன் மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், “பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரத்தில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கப் படையினர், தியாகி ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்றுவிட்டனர்” என்று கூறியிருந்தார். மேலும், அமெரிக்கப் படைகள் பாகிஸ்தான் அரசின் முன் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துவிட்டதாகவும் கூறி, அமெரிக்காவை மறைமுகமாகச் சாடியிருந்தார். ஒசாமா பின் லேடனை `தியாகி’ என இம்ரான் கான் கூறியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரதமர் இம்ரான் கானின் இந்தப் பேச்சுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தன. இம்ரான் கான் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானோ, அரசுத் தரப்பில் அதிகாரிகளோ யாரும் பின் லேடன் குறித்த பேச்சுக்கு விளக்கமளிக்காத நிலையில், சரியாக ஓராண்டு கழித்து தற்போது இம்ரான் கானின் பேச்சு குறித்து பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வாய்தவறி ஒசாமா பின் லேடனைத் தியாகி என்று கூறிவிட்டார். எந்த உள்நோக்கத்துடனும் அவர் அவ்வாறு பேசவில்லை. பாகிஸ்தான், ஒசாமா பின் லேடனை பயங்கரவாதியாகவே கருதுகிறது. அவரால் நிறுவப்பட்ட அல் கொய்தா அமைப்பையும் நாங்கள் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Contact Us