காவல்நிலையத்தில் பேய்கள் மீது புகார் கொடுத்த நபரால் பரபரப்பு!

குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் மாவட்டம் ஜம்புகோடா தாலுகாவைச் சேர்ந்த 35 வயது விவசாயி ஒருவர், அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். மிகவும் பதட்டத்துடன் காணப்பட்ட அந்த நபரை ஆசுவாசப்படுத்தி போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அவர், தோட்டத்தில் தன்னை வேலை செய்ய விடாமல், இரண்டு பேய்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும், தன்னை கொலை செய்வதாகவும் மிரட்டுவதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் தனக்கு மிரட்டல் விடுக்கும் பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட போலீசார் அந்த நபரின் நிலையை உணர்ந்து, அவரை சற்று அமைதிப்படுத்துவதற்காக அவரது புகாரை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பின் அவருடைய குடும்பத்தாரை அழைத்து விசாரித்ததில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், 10 நாட்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து குடும்பத்தாருக்கு அறிவுரை கூறி, அந்த நபரை அவரது குடும்பத்தினருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை போலீசார் பொறுமையுடன் கையாண்ட விதம் குறித்து பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் காவல்நிலையத்தில் பேய்கள் மீது ஒருவர் புகார் கொடுத்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Contact Us