இத்தாலியில் கர்ப்பிணி உள்பட 7 அகதிகள் பலி; பெரும் துயரம்; இலங்கையரும் உள்ளார்களா?

இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே நேற்றுமுன்தினம் இரவு அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிகிறது. லம்பேடுசா தீவிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் இத்தாலி கடலோர காவல் படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் அதற்குள் ஒரு கர்ப்பிணி உட்பட 4 பெண்களும், 3 ஆண்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 46 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

Contact Us