2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபோட்டோக்களை எடுத்து விசித்திரமான ஹாபியில் ஈடுபட்டு வரும் பெண்! என்ன கொடுமைடா

தங்கள் நேரத்தை செலவிட பலரும் தங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வதில் ஈடுபாடும், ஆர்வமும் காட்டுவார்கள். பெரும்பாலும் பிடித்த இசையை கேட்பது, விளையாடுவது அல்லது புத்தகம் படிப்பதை ஒரு முக்கியமான பொழுதுபோக்காக கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியாவில் உள்ள நோர்ஃபோக் (Norfolk ) என்ற மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் விசித்திரமான பொழுதுபோக்கில் ஈடுபட்டு உள்ளார்.

தனது சொந்த மாகாணத்தில் இருக்கும் அனைத்து கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களையும் ஃபோட்டோ எடுப்பதில் தனது நேரத்தை தொடர்ந்து செலவிட்டு வருகிறார். இப்படி இதுவரை இவர் எடுத்துள்ள ஃபோட்டோக்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி விட்டது. லூ காக்கர் என்ற அந்த 48 வயதான பெண்மணி, நோர்ஃபோக் மாகாணத்தை சுற்றி இருக்கும் 700-க்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும் தேவாலய பகுதிகளுக்கு சென்று இதுவரை சுமார் 2,20,000 கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஃபோட்டோ எடுத்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நோர்ஃபோக்கின் கல்லறைகளில் புதிதாக இறப்பவர்களின் கல்லறைகள் சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் கணிசமான மக்கள் இறந்து கொண்டிருப்பதால் இவருடைய பணி கடினமாகவும், தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. இவரது ஃபோட்டோ கலெக்ஷனில் 1600-களின் கல்லறை புகைப்படமும் அடங்கும். லூ காக்கர் மற்றும் அவரது தாய் ஏஞ்சலா பார்க் ஆகிய இருவரும் சேர்ந்து, கல்வெட்டுகளை தெளிவாக காணும் வகையில் பழைய கல்லறைகளில் சிலவற்றை கூட சுத்தம் செய்கின்றனர். அதன் பின்னர் அவற்றை ஃபோட்டோ எடுக்கின்றனர்.

நார்த் வால்ஷாம் நகரைச் சேர்ந்தவாரான லூ காக்கர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஃபோட்டோ கலெக்ஷனை உருவாக்கி வருகிறார். மேலும் அவர் இதுவரை புகைப்படம் எடுத்த கல்லறைகளை ஆவணப்படுத்தும் ஸ்பிரெட் ஷீட்களை வைத்திருக்கிறார். தனது இந்த ஹாபியில் கிடைக்கும் தகவல்களை தான் மட்டுமே வைத்து கொள்ளாமல் பிறருக்கு உதவும் நோக்கிலும் ஷேர் செய்கிறார். எப்படி என்றால் ஒவ்வொரு கல்லறையையும் அவர் ரெக்கார்ட் செய்யும் போது, நோர்ஃபோக் மாகாணத்தில் அடக்கம் செய்யப்பட்ட குடும்ப உறவினர்களை தேடுவோருக்கு உதவ, ஃபைண்ட்மைபாஸ்ட் (Findmypast) என்ற மரபுவழி வெப்சைட்டிற்கு தான் சேகரிக்கும் தகவல்களை சமர்ப்பிக்கிறார்.

தனது இந்த பணி பற்றி கூறி உள்ள லூ காக்கர், ஒவ்வொரு நாளும் கணிசமான மக்கள் இறக்கிறார்கள் என்பதால் இதை முழுவதுமாக என்னால் முடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் இதுவரை சேகரித்த தகவல்கள் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், இதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மீண்டும் கண்டுபிடிக்க முடியும். இப்போது பலர் தங்களது பூர்வீகம் மற்றும் முன்னோர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறிய விரும்புவது இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. அப்படிப்பட்ட தேடலில் ஈடுபடுவோருக்கு இது உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஷிப்ட் மேனேஜர் வேலை பார்க்கும் தனக்கு இந்த விசித்திரமான ஆர்வம், சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த குடும்ப வரலாற்றை ஆய்வு செய்ய தொடங்கிய போது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார் லூ காக்கர்.

Contact Us