மைனர் சிறுமிகள், விதவை பெண் என ஒரே நாளில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான அவலம்: அதிரவைக்கும் சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மைனர் சிறுமிகள் இருவர் மற்றும் ஒரு விதவைப் பெண் என 3 வெவ்வேறு இடங்களில் நடைபெற்றிருக்கும் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் 1:

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பதோகர் கிராமத்தைச் சேர்ந்த மைனர் சிறுமி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் காலைக் கடனை முடிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றிருக்கிறார். அங்கு மர்ம நபர்கள் சிலர் அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து அச்சிறுமி மயக்கநிலைக்கு சென்றதால், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் உறவினர்கள் சிறுமியை தேடி வந்த போது அவர்களுக்கு விபரீதம் புரிந்திருக்கிறது. இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இரு தரப்பினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டுள்ளதால், பதோகர் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் 2:

சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய் இரவில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அந்த வழியாக வந்த சொகுசு பேருந்தை சோதனையிட்ட போது, பேருந்தின் கடைசி சீட்டில் இரு சிறுமிகள் உட்பட மூன்று சிறுவர்கள் மறைந்திருந்தனர். அதில் 15 வயது சிறுமி ஒருவரை மூவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பாலியல் வன்புணர்வுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் மாற்றாந்தாய் சகோதரி, பேருந்தின் ஓட்டுனர் மற்றும் பேருந்தில் இருந்த மற்றொரு நபர் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் 3:

ஹப்பூர் மாவட்டத்தின் கர் கோத்வாலி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர், மாவட்ட தலைநகருக்கு விதவைகளுக்கான உதவித்தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிப்பதற்காக தனக்கு தெரிந்த இருவருடன் சென்றிருக்கிறார். வீட்டுக்கு திரும்பும் வழியில் தண்ணீர் குடிப்பதற்காக ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற அப்பெண்ணுடன் உடன் வந்த இருவரும் அங்குள்ள அறை ஒன்றில் அவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். அங்கிருந்து தப்பிய அப்பெண் இருவர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடிக்கடி பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடைபெறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் சிறுமிகள் உட்பட மூவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us