சமரசம் பேசும் போது நண்பரின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்; தமிழர் பகுதியில் இப்படியொரு சம்பவம்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (42). இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் (40) கடந்த 30-ஆம் தேதி இரவு டைல்ஸ் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமரசம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டதில் சந்துரு திடீரென சிவகுமாரின் வலதுபக்க காதை கடித்து துப்பியுள்ளார். இதைப் பார்த்த சிவக்குமாரின் உறவினர் கார்த்திகேயன் தடுத்தபோது சந்துரு கட்டையால் கார்த்திகேயனை தாக்கியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு 3 தையல் போடப்பட்டுள்ளது.

சிவகுமாருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த குத்தாலம் போலீசார் சந்துருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us